Published:Updated:

`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்!' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடக்க இருப்பதால் அதில் வெற்றி பெற ஆண்களும் பெண்களும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்
இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்

தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் நடுவே `இளவட்டக்கல்’ என்ற உருண்டையான பெரிய கல் கிடப்பது வழக்கம். இப்போதும் பல கிராமங்களில் அந்தக் கல் இருந்தபோதிலும் அதன் முக்கியத்துவம் தெரியாத நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்தக் கல்லைத் தூக்கியவர்களுக்கு மட்டுமே பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பார்களாம். 

உரல் தூக்கிப் பயிற்சி எடுக்கும் பெண்
உரல் தூக்கிப் பயிற்சி எடுக்கும் பெண்

உருண்டையாக இருக்கும் இளவட்டக்கல்லைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்லும் அளவுக்கு வலிமையான இளைஞர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். தற்போதைய அவசரமான உலகத்தில், கிராமிய விளையாட்டுகள் பலவும் மறைந்து வருகின்றன. இருந்தாலும், ஒரு சில கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது அத்தகைய விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் பண்டிகைக்கான விளையாட்டுப் போட்டிகளின்போது கல்யாணக் கல் என்று அழைக்கப்படும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அதேபோல பெண்களுக்காக உரல் தூக்கும் போட்டியும் நடத்தப்படுகிறது.

பயிற்சியில் இளைஞர்கள்
பயிற்சியில் இளைஞர்கள்

அதனால் வடலிவிளை கிராமத்தில் இப்போதே அதற்கான பயிற்சியில் இளைஞர்களும் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள். 50, 75, 100 மற்றும் 125 கிலோ எடை கொண்ட வழுவழுப்பான இளவட்டக்கல்லைத் தோளில் தூக்கிச் சுமப்பதற்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்கள். பெண்களும் உரல் தூக்கும் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர்.

இளைஞர்கள் இரு கைகளாலும் இளவட்டக்கல்லை நெஞ்சோடு அணைத்துத் தூக்கியபடி நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்திச் சுமப்பார்கள். கல்லை பலமுறை தூக்கி முதுகுக்குப் பின்புறமாக எறிவது, கல்லைச் சுமந்தபடியே கோயிலை வலம் வருவது, தெப்பக்குளத்தை வலம் வருவது போன்ற சாதனைகளையும் இளைஞர்கள் நிகழ்த்துவார்கள். 

உற்சாகமூட்டும் கிராமத்தினர்
உற்சாகமூட்டும் கிராமத்தினர்

பெண்களும் உரலைத் தூக்கிச் சுமந்து தங்கள் பலத்தை நிரூபிப்பார்கள். அதனால் இரு பாலரும் இப்போதே கோயில் வளாகத்தில் கிடக்கும் இளவட்டக்கல் மற்றும் உரல் ஆகியவற்றைத் தூக்குவதற்குப் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி கூறுகையில், ``நான் மூன்று வருடங்களாக உரல் தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த இரு முறையும் பயிற்சி எடுக்காமலே போட்டியில் பங்கேற்றேன். இந்த வருடம் போட்டி பலமாக இருக்கும் என்பதால் பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார்.

ஆண்களுக்கு வயதுக்கு ஏற்ற வகையில் எடை கொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கராஜ் பேசுகையில், ``நான் கடந்த வருடம் 125 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை 25 முறை தூக்கினேன். அதனால் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்தமுறை அதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் தூக்க வேண்டும் என்பதற்காகப் பயிற்சி எடுக்கிறேன்’’ என்றார்.

பயிற்சி எடுக்கும் வீரர் தங்கராஜ்
பயிற்சி எடுக்கும் வீரர் தங்கராஜ்

ஆண்களும் பெண்களும் உடல் தகுதியை வெளிப்படுத்தும் வகையிலான இந்தப் போட்டிகள் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று வருவதாகக் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்கள் நினைவுகூர்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையின்போது நடக்கும் இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வடலிவிளை கிராமத்துக்கு வருவார்கள் என்பது கூடுதல் சிறப்பு.