Published:Updated:

`அனைத்தும் நன்றாகவே நடந்தது!’ - கொரோனாவை வென்ற நெல்லை இளைஞர் உற்சாகம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் முதல் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட இளைஞர், துபாயில் இருந்து வந்தவர். அவர் 17 நாள் சிகிச்சைக்குப் பின்னர், குணமடைந்து வீடு திரும்பினார்.

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நெல்லை என்.ஜி.ஓ காலனியில் குடியிருந்து வந்தார். துபாயில் உள்ள ஒரு கம்பெனியின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், மார்ச் 17-ம் தேதி நெல்லைக்கு வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகள் இருந்ததால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

`ஒருவர் மூலம் 406 பேருக்குக் கொரோனா பரவும்!' -`தனி மனித இடைவெளி'யை வலியுறுத்தும் சுகாதாரத்துறை

அதனால் உறவினர்கள் யாரையும் சந்திக்காமல் விலகி இருக்க முடிவெடுத்த அவர், ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்ததால் மார்ச் 21-ம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களைச் சந்தித்துள்ளார்.

`வைரஸ் போராளிகள்; நிர்வாகத்துடன் கைகோத்த போலீஸ்!’ -  கொரோனா சங்கிலியை உடைத்து அசத்திய ம.பி நகரம்

அவருக்கான அறிகுறிகளை வைத்து தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவு மார்ச் 22-ம் தேதி வெளிவந்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பின்னர், அவர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார். 

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

இதையடுத்து அவர் சென்று வந்த இடங்கள், அவர் தங்கியிருந்த லாட்ஜ் ஆகியவற்றை சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். அவர் சந்தித்த நபர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நோய் முழுமையாகக் குணம் அடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நெல்லையின் முதல் கொரோனா நோயாளி நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 14 நாள்கள் அவரைத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

குணமடைந்து வீடு திரும்பிய அந்த இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, ``மருத்துவமனையில் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அனைத்தும் சிறப்பாக இருந்தது. என் மீது அக்கறை கொண்டு கவனித்துக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு