Published:Updated:

`ஒரே கமென்ட்; பிரச்னைக்கு இன்ஸ்டன்ட் தீர்வு!’ - திருப்பூர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டு

`பொதுப் பிரச்னைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மக்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசலாம். பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும்.'

விஜய கார்த்திகேயன்
விஜய கார்த்திகேயன்

இன்றைய சூழலில் ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்குமான பாலமாக இந்த சமூக வலைதளங்கள் செயல்படுகின்றன. மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இதில் குறிப்பிடத்தகுந்தவர். ட்விட்டர் பதிவுகளின் மூலமே வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்னைகளை அறிந்துகொண்டு, அதுகுறித்து நடவடிக்கை எடுத்தார். தனது ட்விட்டர் பக்கத்தை மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் தளமாக மாற்றியவர் சுஷ்மா சுவராஜ். அதுபோல, திருப்பூர் மாவட்ட கலெக்டரும்கூட, தனது ஃபேஸ்புக் பக்கத்தை பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் களமாக பயன்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராகக் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, நகரியல் பயிற்சி மைய இயக்குநராக இருந்த கே.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

``பொதுப் பிரச்னைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மக்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசலாம். பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதவியேற்ற அன்றே திருப்பூர் மாவட்ட மக்களை ஆச்சர்யப்படுத்தினார் விஜய கார்த்திகேயன். வார்த்தைகளோடு மட்டும் நிற்காமல், அதைத் தினம்தோறும் நேரடியாகச் செயல்படுத்தியும் வருகிறார். ரேஷன் கடைகளில் ஆய்வு, அரசு மருத்துவமனைக்குத் திடீர் விசிட், குறைதீர்க்கும் கூட்டம், மாற்றுத் திறனாளிகளின் மனுக்களுக்கு உடனடி உதவித் தொகை எனப் பரபரப்பாக இயங்கிவருகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஜய கார்த்திகேயன் `சிறப்பு விவசாய நியாயவிலைக்கடை’ திறப்பு தொடர்பாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ``#திருப்பூர் ஶ்ரீநகர் பிச்சம்பாளையம் புதூரில் இன்று முதல் சிறப்பு விவசாயி நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது. விவசாய பெருமக்களின் உற்பத்திப் பொருள்கள் அனைத்தும் உற்பத்தி விலையிலேயே பொது மக்களுக்குச் சென்றடையும்படி செயல்படுத்தப்படுகிறது. இங்கு Smart cardகளும், உழவர் பாதுகாப்பு அட்டைகளும் பதிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கான கமென்டில் மாதேஸ் என்பவர், ``Sir .... எங்க ஏரியாவுல குப்பைகளை எடுக்க வரவே மாட்டிக்கிறாங்க... இதனால நிறைய குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம போகுது... இடம்: தென்னம் பாளையம் காலனி” என்று கமென்ட் செய்திருந்தார். உடனே அதற்கு விஜய கார்த்திகேயன், ``எந்த இடம்” என்று கேட்க, மாதேஸ், குப்பை அள்ளாமல் கிடக்கும் இடத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தார்.

நடவடிக்கை
நடவடிக்கை

உடனே கலெக்டர், `தெரு பெயர், விலாசத்தை தெளிவாக பதிவிடவும்’ என்று கமென்டில் கூறியுள்ளார். ``உங்களைப் போல எளிய கலெக்டர் கிடைத்ததற்கு நன்றி .... உடனே reply பண்ணும் கலெக்டர் கிடைப்பது அபூர்வம்... நன்றி sir” என்று மாதேஸ் தெரிவித்து, எந்த இடம் என்றும் விளக்கமாகப் பதிவிட்டார். தொடர்ந்து, குப்பைகளை சுத்தம் செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்விக்குப் பதில் சொன்னதுடன், அந்தப் பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது. அத்தோடு சிலர் தங்கள் பகுதி பிரச்னைகளையும் கமென்டில் பதிவிட்டுள்ளனர்.