Published:Updated:

`கொஞ்சம் பொறுத்துக்கொள் மகனே!' - சுர்ஜித்துக்காக பிரார்த்தனையை முன்னெடுக்கும் மக்கள் #prayforsurjith

திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற சிறுவனை விரைவில் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

நாளை தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மக்களும் மும்முரமாகத் தயாராகிவருகின்றனர். இந்த நேரத்தில் திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள தங்கள் இரண்டு வயதுக் குழந்தையை மீட்கப் போராடிவருகிறது.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பிரிட்டோ மற்றும் கலாராணி தம்பதியின் இரண்டு வயது மகன் சுர்ஜித், நேற்று மாலை 5:30 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

கடந்த 15 மணி நேரத்துக்கும் மேலாகச் சிறுவனை மீட்கும் பணி நீடித்துவருகிறது. தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் பிரத்தியேக இயந்திரங்கள் கொண்டு குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்துவருகிறது. இதுவரை ஏழு தனிக் குழுக்கள் சிறுவனை மீட்கும் பணியில் களத்தில் உள்ளன.

70 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை எப்படியாவது மீட்டுவிடுங்கள் என்ற கோரிக்கைகளும், நாங்களும் குழந்தையை மீட்க உதவுகிறோம் என்ற அடிப்படையில் பல யோசனைகளும், சுர்ஜித்துக்கான பிரார்த்தனைகளும் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. #prayforsurjith, #SaveSurjith என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகிவருகின்றன.

4 நாள், 60 மணி நேரம், பல அடிகள்! - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீண்ட நம்பிக்கை குழந்தைகள்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், ``மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு, அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்காகப் போடப்பட்ட துளையில் சுர்ஜித் என்ற 2 வயதுக் குழந்தை விழுந்து சிக்கிக் கொண்டதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. மீட்புக்குழுவினர் விரைவாகவும், விவேகமாகவும் செயல்பட்டு அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் இல்லாமல் பொதுமக்களும் சிறுவனை மீட்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பிரார்த்தனைகளை முன்வைத்துவருகின்றனர்.

`இரவு முதல் தொடரும் மீட்புப் பணி; என்ன நடந்தது?' - விவரித்த அமைச்சர் விஜயபாஸ்கர் #SaveSujith

ராஜ்குமார் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், அழுத்தமானி (pressure gauge) கொண்டு குழந்தையைக் காப்பாற்றலாம் என்ற வரைப்படத்துடன் யோசனை தெரிவித்துள்ளார். அதேபோன்று பாலகுமார் என்பவரும், பைப் பலூன் மூலம் குழந்தையை மீட்கலாம் என்ற யோசனையை வழங்கியுள்ளார்.

``நம்பிக்கை இழக்காதே மகனே... எல்லா முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது, உன்னைக் காப்பாற்றிவிடுவோம்! தாமதம் தான், என்ன செய்ய? நிலாவை ஆராய்ச்சி செய்யத் தெரிந்த எங்களுக்கு உன்னைப் போன்ற பிஞ்சுகளைக் காக்கும் உபகரணம் செய்யத் தெரியாமல்போய்விட்டது. கொஞ்சம் பொறுத்துக்கொள் மகனே!” என்று ராஜேஷ் என்பவர் தன் ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.