Published:Updated:

`பார்’ போல் மாறிய புதிய பேருந்து நிலையம்! -குவிந்து கிடக்கும் மது பாட்டில்கள்

புதிய பேருந்து நிலையம்
புதிய பேருந்து நிலையம்

வெளியூர்களுக்குச் செல்பவர்கள், அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து பேருந்து நிலைய வாசலிலேயே குடித்துவிட்டு வீசிச் செல்கிறார்கள். 

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளின் பார்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையம் குடிகாரர்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. 

மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்

டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருப்பதால், புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள மதுக்கடையிலிருந்து பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள், குடிப்பதற்கு இடம் இல்லாததால் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிக் குடிக்கிறார்கள். பின்னர், பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கிறார்கள்.

பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் ஏராளமான மது பாட்டில்கள் குவியலாகக் கிடக்கின்றன. ஒரு சிலர் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு அங்கேயே அரைகுறை உடைகளுடன் படுத்துக் கிடப்பதால் பேருந்து நிலையத்துக்கு வரக்கூடிய பெண்கள் முகம் சுளித்துச் செல்லும் நிலை உள்ளது.

சிதறிக் கிடக்கும் மது பாட்டில்கள்
சிதறிக் கிடக்கும் மது பாட்டில்கள்

பேருந்து நிலையத்தின் உள்ளே கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லாததால், பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு அருகிலேயே சிலர் சிறுநீர் கழிப்பதால் நாற்றமடிக்கிறது. பழக்கடை மற்றும் டீக்கடைகளின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

கொரோனா பாதிப்பால் அச்சம் நிலவும் நிலையில், புதிய பேருந்து நிலையத்தைச் சுத்தமாகப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு