Published:Updated:

எளிமையாக நடந்த திருமணம்.. தாம்பூலப் பைக்குப் பதில் நிவாரணப் பொருள்! - அசத்திய தூத்துக்குடி தம்பதி

தொகுப்பு பை வழங்கும் மணமக்கள்
தொகுப்பு பை வழங்கும் மணமக்கள்

தூத்துக்குடியில் ஊரடங்கால் திருமணத்தை எளிய முறையில் செய்துகொண்டு, தன் ஊரிலுள்ள 300 குடும்பத்துக்கு அரிசி, மளிகைப் பொருள்களைத் திருமண தாம்பூலமாக வழங்கியுள்ளனர் புதுமணத் தம்பதிகள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுண்டங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, சொர்ணலதா ஆகியோரின் மகள் மோனிஷாவுக்கும் மற்றும் நெல்லை மாவட்டம் குட்டம் கஸ்பாவைச் சேர்ந்த உதயச்சந்திர மார்த்தாண்டன், கலைமதி ஆகியோரின் மகன் அருண் சுந்தரமார்த்தாண்டனுக்கும் சுண்டங்கோட்டை கிராமத்தில் வைத்து எளிய முறையில் சாத்தன்குளம் தாசில்தார் ராஜலெட்சுமி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

தொகுப்பு பை வழங்கும் தாசில்தார் ராஜலெட்சுமி
தொகுப்பு பை வழங்கும் தாசில்தார் ராஜலெட்சுமி

இதில், சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு 30 பேர் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் முடித்தவுடன், இதே சுண்டங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பையை மோனிஷா, அருண் சுந்தரமார்த்தாண்டன் தம்பதியர் வழங்கினர்.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை ராமமூர்த்தியிடம் பேசினோம், ``திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனியில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில்தான் என் மகளுக்குத் திருமணம் செய்வதாக நிச்சயித்து, பத்திரிகைக்கைகளும் அடிச்சோம். 1,500 பேருக்கு பத்திரிகை கொடுத்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிஞ்சிடும்னு நினைச்சோம்.

மணமக்கள் மோனிஷா- அருண்
மணமக்கள் மோனிஷா- அருண்

ஆனால், மே 3-ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. திருமணங்களுக்கு 20 பேர் வரை மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால, பொண்ணு கல்யாணம் எப்படி நடக்கப் போகுதோன்னு நினைச்சு கலங்குனேன். இதற்கிடையில் பலரும் அவரவர் சொந்த ஊரில் வச்சு எளிமையா கல்யாணம் நடத்துறதைக் கேள்விப்பட்டேன். பத்திரிகைகளிலும் செய்தி வர்றதைப் படிச்சேன்.

நம்ம பொண்ணுக்கும் சொந்த கிராமத்துலயே, நிச்சயிக்கப்பட்ட அதே தேதியில கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்னு வீட்ல எல்லாரும் கலந்து பேசி முடிவெடுத்தோம். மண்டபத்துல 1,500 பேர் கலந்துக்குவாங்கன்னு திட்டமிட்ட நிலையில், வீட்டுலயே பந்தல் போட்டு நெருங்கிய உறவினர்கள் 30 பேரை மட்டும் அழைச்சு கல்யாணத்தை எளிமையா முடிச்சோம்.

மணக்கள் மோனிஷா - அருண்
மணக்கள் மோனிஷா - அருண்

மணமகள், மணமகன் உறவினர்கள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்தினோம். உறவினர்கள் சமூக இடைவெளி விட்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். தன்னோட சொந்த ஊர்ல வச்சு கல்யாணம் நடத்துறோம். ஆனா, ஊர் மக்களை கூப்பிட்டு, சாப்பாடுகூட போட முடியலயேங்குற வருத்தம் எனக்குள்ள இருந்துச்சு.

அதனால, எங்க கிராமத்துல உள்ள கஷ்டப்படுற 300 குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறிகள், சானிடைசர், மாஸ்க் ஆகியவை அடங்கிய தொகுப்புப் பைகளை வழங்கினோம். இதற்காக தாசில்தாரிடம் முன்கூட்டியே முறையான அனுமதியும் வாங்கினோம். தொகுப்புப் பையை சாத்தான்குளம் தாசில்தார் ராஜலெட்சுமி கொடுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 பேருக்கு மட்டும் மணமக்கள் கொடுத்தார்கள்.

தொகுப்பு பை வழங்கல்
தொகுப்பு பை வழங்கல்

மீதமுள்ள பைகளை வீடுவீடாகச் சென்று நாங்களே கொடுத்து விட்டோம். அவரவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஊர்மக்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போதைய நிலையில், திருமணச் செலவுப் பணத்தின் ஒரு பகுதியிலிருந்து, ஊர் மக்களுக்கு என் மகளின் திருமணத் தாம்பூலப் பைகளைப்போல நினைத்து தொகுப்புப் பைகள் வழங்கியதை நினைத்து குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு