Published:Updated:

குக்கரில் சரக்கு, யூடியூப் ஃபார்முலா, வீட்டுக்குள் ஊறல்: குடிமகன்களின் புதுப்புது டெக்னிக்குகள்!

சாராய ஊறல்
News
சாராய ஊறல் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

ஷேவிங் லோஷனை தண்ணீரில் கலந்து குடிப்பது அல்லது குக்கரில் மது தயாரிப்பது, சாராய ஊறல் போடுவது என்று சுயமாக இறங்கி உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்வதும், போலீஸிடம் சிக்குவதுமாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா ஒருபக்கம் அட்டகாசம் செய்ய, மற்றொரு பக்கம் குடிமகன்களும், சரக்கு விற்பனையாளர்களும் அநியாயத்துக்கு அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி தினமொரு சுவராஸ்யமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கைப்பற்றிய மது பாட்டில்கள்
கைப்பற்றிய மது பாட்டில்கள்

ஊரடங்கால் உணவுப்பொருள்கள் கிடைக்கவில்லை, சிறிது நேரம் திறந்தாலும் பொருள்கள் வாங்க பணமில்லை என்று பெரும்பாலான மக்கள் புலம்பிக்கொண்டிருக்கும் சூழலில், டாஸ்மாக் எப்போது திறப்பார்கள் என்று தினமும் கடையை ஏக்கத்துடன் பார்த்துவிட்டுச் செல்லும் கூட்டத்தை சமாளிப்பதுதான் பெரும்பாடாக உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்னொரு பக்கம் மூன்று மடங்கு விலையில் மது கள்ளத்தனமாக கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதையும் சில டாஸ்மாக் ஊழியர்களே முன்னின்று செய்து வருகிறார்கள். சிக்கனமாகப் போதை தேடுவோர் சானிடைஸர், ஷேவிங் லோஷனை தண்ணீரில் கலந்து குடிப்பது அல்லது குக்கரில் மது தயாரிப்பது, சாராய ஊறல் போடுவது என்று சுயமாக இறங்கி உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்வதும், போலீஸிடம் சிக்குவதுமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ``மது அடிமைகள் ஷேவிங் லோஷன், கிரிமி நாசினியைக் குடிக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதைத் தடுக்க, தினமும் 2 மணி நேரம் மதுக்கடையை திறக்க வேண்டும்'' என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருடுபோன மதுக்கடை
திருடுபோன மதுக்கடை

நீதித்துறையும் குடிமகன்களுக்கு நோ சொல்லிவிட்ட பின்பு, போலீஸில் சிக்கினாலும் பரவாயில்லை என்று குடிமகன்கள் பலரும் `நமக்கு நாமே' என்று கிளம்பிவிட்டார்கள். அது எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதுதான் இப்போது கொரோனாவை விட பெரும் பிரச்னையாக உள்ளது.

சமீபத்தில் சேலத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் சரக்கடித்துவிட்டு கார் ஓட்டி வந்தபோது தடுத்துக் கேட்ட பெண் போலீஸிடம் மப்பில் உளறியது வீடியோவாக வலம் வந்தது. ஊரடங்கிலும் போதை அடங்காமல் பலர் சுற்றி வருகிறார்கள் என்பதற்கு அச்சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்தது. ஊரடங்கு காலத்தில் நடந்து வரும் இன்னும் சில சம்பவங்களை பார்ப்போம்....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நாள்களுக்கு முன் வாடிப்பட்டி அருகே இளைஞர்கள் சிலர் சரக்கு கிடைக்காமல், கடைசியில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சினார்கள். பக்காவாக எல்லாம் முடிந்து பினிஷிங் ஸ்டேஜில் போலீஸ் வந்து அவர்களைக் கைது செய்து காய்ச்சி விட்டார்கள்.

சாராய ஊறல்
சாராய ஊறல்

ஏப்ரல் 11-ல் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியில் டி.எஸ்.பி தலைமையில் போலீஸ் ரோந்து சென்றபோது தோட்டம் ஒன்றில் கும்பல் நிற்பதைப் பார்த்து அருகில் சென்றுள்ளனர். போலீஸைப் பார்த்ததும் சிலர் ஓட்டமெடுத்துள்ளார்கள். அப்பகுதி டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ஆனந்த் பாபு உட்பட 3 பேரை பிடித்தனர். அங்கு ஒரு டிரம்மில் டாஸ்மாக் கடையிலிருந்து கொண்டுவந்த மது பாட்டில்களை திறந்து ஊற்றி, அதில் இன்னும் சில பொருள்களை கலந்து சாதா மதுவை மதிப்புக் கூட்டி ஊரடங்கு காலத்தில் ஸ்பெஷல் சரக்கு விற்க திட்டமிட்டது சொதப்பலாகிப் போனது.

ஏப்ரல் 16-ல் மானாமதுரை அருகே முந்திரித் தோப்புக்குள் வாடிக்கிடந்த குடிமகன்களின் வாட்டம் போக்க சாராய மூட்டம் போட்ட ராமு என்பவரை கைது செய்து 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைப்பற்றிய போலீஸ் அவரின் ‘சமூகப் பங்களிப்பில்’ இடைவெளியை ஏற்படுத்தியது.

அதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரைப் பகுதி கிராம குடிமகன்களுக்காக புதுவிதமாக மருந்தெல்லாம் போட்டு கள் தயாரித்த முருகவேல் என்பவரை 500 லிட்டர் கள்ளுடன் கைது செய்து அவருடைய புதிய வகை கள் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சாராயம் காய்ச்சல்
சாராயம் காய்ச்சல்

ஏப்ரல் 17-ல் ஈரோடு அந்தியூரில் நடந்த சம்பவம் ரொம்ப கசப்பானது. மது கிடைக்காதா என்று 3 வாலிபர்கள் அலைந்து திரிந்தபோது, குவார்ட்டர் 300 ரூபாய்க்கு மது உள்ளது என்று தவிட்டுப் பாளையத்தைச் சேர்ந்தவர் கூற, மகிழ்ச்சியுடன் அவருடன் சென்றவர்கள் விலையைப் பற்றிக் கவலைப்படாமல் 10 குவாட்டர் பாட்டில்களை ரூ.3000-க்கு வாங்கியுள்ளார்கள். சரக்கில்லாமல் காய்ந்து கிடந்த மூவரும் அங்கேயே வாங்கிய மது பாட்டிலை திறந்து குடித்தவர்களுக்கு பேரதிர்ச்சி, பாட்டிலில் இருந்தது ப்ளைன் காபி.

ஏப்ரல் 17-ல் தேனி மாவட்டம் டி.அனைக்கரைப்பட்டி பக்கம் ரோந்து சென்ற போலீஸுக்கு மயக்கும் தரும் வாசம் வரவே, வாசம் வந்த தோட்டத்துப் பக்கம் சென்று ப்ராசஸ் ஆகிக்கொண்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலுடன் சின்னமுத்து, குருசாமியைக் கைது செய்தனர்.

ஏப்ரல் 18-ல் மானாமதுரையில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து அங்கு தங்கிக்கொண்டு ஊறல் போட்டு சாராயம் விற்பனை செய்து பிராண்டை பிரபலமாக்கி வந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்தி, ராஜேஷ் ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். நான்கு பேரும் டிகிரி முடித்தவர்கள் என்பதால் தயாரிப்பு, விற்பனையை நேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள்.

பிடிக்கப்பட்ட மது பாட்டில்கள்
பிடிக்கப்பட்ட மது பாட்டில்கள்

ஏப்ரல் 20-ல் மதுரை அருகே கருப்பாயூரனியில் பதநீரில் தூக்க மாத்திரைகளைக் கலந்து, கள் என்று சொல்லி விற்ற கும்பலை 130 லிட்டர் கலப்படக் கள்ளுடன் கைது செய்தனர். ராம்குமார், மணிகண்டன், சேகர், ஈஸ்வரன் ஆகியோரைக் கைது செய்தனர். இப்போது குடிமகன்கள் இருக்கும் நிலைக்கு வெறும் தண்ணீரில் தூக்க மாத்திரையைப் போட்டுக் கொடுத்தாலும் சரக்கென்று குடிப்பார்கள்.

ஏப்ரல் 20-ல் சென்னை பிருந்தாவன் நகரில் பீர், பிராந்தி என வெரைட்டியாக கிடைக்கிறது என்று மதுப் பிரியர்கள் படையெடுக்க, அவர்களுடன் சேர்ந்து போலீஸும் படை எடுத்தது. கிளைமேக்சில் 70 மது பாட்டில்களுடன் ரிஸ்வான் என்பவரை கைது செய்தனர். திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர், ஊரடங்கில் இத்தொழிலைத் தொடங்கியிருக்கிறார்.

அதே நாளில் விருகம்பாக்கத்தில் காரை நடமாடும் கடையாக்கி ஏரியாக்களுக்கு மக்களைத் தேடிச்சென்று சரக்கு விற்பனை செய்த தேவராஜ், பிரதீப் ஆகியோரை 200 மது பாட்டில்களுடன் கைது செய்து அவர்களின் `குடி நிவாரணப்பணி’யை முடக்கியது போலீஸ்.

சாராய ஊறல்
சாராய ஊறல்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஏப்ரல் 21-ல் ராமநாதபுரத்தில் லாரி மற்றும் காரை சோதனை செய்ததில் 1000 மதுபாட்டில்களைக் கைப்பற்றினர். டாஸ்மாக் கடையிலிருந்து திருமண மண்டபத்தில் பாதுக்காப்பாக வைக்க கொண்டுசென்ற மது பாட்டில்களை லவட்டி வந்திருக்கிறார்கள். இந்தக் கடத்தலுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய டாஸ்மாக் சூப்பர்வைசர் ராஜகுருவுடன் 6 பேரைக் கைது செய்தனர்.

அதே நாளில் காரைக்குடி, குன்றக்குடி, கண்டனூர் பகுதியில் நடந்த சோதனையில் 2,500 மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக பிடித்தனர். இதிலும் டாஸ்மாக் சூப்பர்வைசர் உட்பட 5 பேரைக் கைது செய்தனர். எந்த அச்சமும் இல்லாமல் கடையைத் திறந்து நேரடியாக எடுத்து வந்திருக்கிறார்கள்.

திருடுபோன மதுக்கடை
திருடுபோன மதுக்கடை
ஈ.ஜெ.நந்தகுமார்

இரண்டு நாள்களுக்கு முன் திருப்பூரில் காரில் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி ஒவ்வொரு ஏரியாவாக சென்று மது விற்பனை செய்த 4 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் பழைய மெத்தட் முதல் இப்போதுள்ள டெக்னாலஜி வரை பயன்படுத்தி சரக்கு குடிக்க நினைப்போரும், சுயமாக தயாரிக்க முயல்வோரும், தயாரித்து அதையே கமர்சியலாக்கி முன்னேறத் துடிப்போரைப் பற்றிய செய்திகள் கொரோனா காலத்தில் வீடடங்கிக் கிடப்பவர்களுக்கு `என்னடா பண்ணிட்டிருக்கீங்க’ என உதறலைக் கொடுக்கிறது.