Published:Updated:

`கியார்’-ஐ தொடர்ந்து `மஹா’; அரபிக்கடலில் உருவான அடுத்த புயல் - விடுமுறை அறிவிப்பு

கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹா மற்றும் கியார் புயல்
மஹா மற்றும் கியார் புயல் ( Twitter/@metofficestorms )

அரபிக்கடலில் ஏற்கெனவே `கியார்’ புயல் நிலைகொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பருவமழை மூலம் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. குமரிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது மழைக்கு காரணமாக சொல்லப்பட்டது.

ஏற்கெனவே அரபிக்கடலில் `கியார்’ என்னும் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர்களை பத்திரமாக கரைக்கு அழைத்துவரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மழை
மழை

இந்த நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் புதியதாக ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. அந்தப் புயலுக்கு `மஹா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று தீவிர புயலாக மாறும் எனவும் லட்சத்தீவிலிருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் மூலம் அதிக அளவு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் உதகை, குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியிலுள்ள சில தாலுக்காவிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுவையைப் பொறுத்தவரையில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.