Published:Updated:

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சி.வெற்றிவேல்

குளித்தலை அருகே உள்ள வடசேரி கிராமத்தில், சோழர் கால புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குமிழித் தூம்பு
குமிழித் தூம்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு ஒன்று மத்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குமிழித் தூம்புக் கல்வெட்டு
குமிழித் தூம்புக் கல்வெட்டு

திருச்சி மத்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த யத்தீஸ்குமார், பாலமுருகன் மற்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், பாசனத்துக்குப் பயன்பட்ட 'குமிழித் தூம்புக் (மதகு) கல்வெட்டு' ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கல்வெட்டு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட பார்த்திபன் நம்மோடு பேசினார். “ 'ஊற்றத்தூர் வளநாடு' என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் கிடைத்திருக்கும் குமிழித் தூம்புக் கல்வெட்டு, 9 அல்லது 10 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குறிப்பாக, பராந்தகச் சோழருக்கும் ராஜராஜ சோழருக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டில் ’ஸ்ரீ நக்கனார் சேவித்தார்’ என்று தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

குமிழித் தூம்புக் கல்வெட்டு
குமிழித் தூம்புக் கல்வெட்டு

அந்தக் காலத்தில் மன்னர்கள் மட்டுமல்லாமல் நாடுகாவல் அதிகாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், தேவரடியார்கள் என்று பலரும் மக்களுக்குப் பயன்படும் வகையில் மதகு அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வகையில், நக்கனார் என்பவர் அமைத்துக் கொடுத்த குமிழித் தூம்பு இது. ’சேவித்தார்’ என்று மரியாதை விகுதியுடன் பொறிக்கப்பட்டிருப்பதால், இவர் இந்தப் பகுதியில் முக்கியஸ்தராக இருந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமைத்துக்கொடுத்த குமிழித் தூம்பு இன்று வரையிலும் நல்லமுறையில் வேலை செய்கிறது என்பது வியப்பானது. இந்தப் பகுதியில் மேற்கொண்டு ஆய்வுசெய்துவருகிறோம். புதிதாக கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.