Published:Updated:

`5 அடி உயரத்தில் 3 அடுக்கு மரக்கட்டைத் தடுப்பு’ - மணல் புயலால் உருவாகும் குவியலைத் தடுக்குமா?

தனுஷ்கோடி: மரக்கட்டைத் தடுப்பு  அமைப்பு.
தனுஷ்கோடி: மரக்கட்டைத் தடுப்பு அமைப்பு. ( உ.பாண்டி )

கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பனை மட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர்.

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் மணல் புயலைத் தடுக்க மரத்தால் ஆன தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கான்கிரீட் தடுப்புகளே கடல் காற்றின் சீற்றத்தைத் தடுக்க முடியாதநிலையில் மரத்தடுப்பு மூலம் மணல் புயலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை: மரக்கட்டைத் தடுப்பு  அமைப்பு.
தேசிய நெடுஞ்சாலைத்துறை: மரக்கட்டைத் தடுப்பு அமைப்பு.
உ.பாண்டி

துறைமுக நகரமாக விளங்கிவந்த தனுஷ்கோடி கடந்த 1964-ம் ஆண்டு, டிசம்பரில் ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. இந்த கோரப் புயல் தாக்குதலில் தனுஷ்கோடிக்குச் சென்ற ரயில் பாதை மற்றும் சாலைகள் உருக்குலைந்து போயின. இந்தப் புயலின் நினைவுகளாக தனுஷ்கோடிப் பகுதியில் காட்சியளிக்கும் கட்டடங்களையும், இருபுறமும் இருக்கும் கடல்நீர் ஒன்றிணையும் பகுதியைக் காண்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இரு பக்கக் கடலும் ஒன்றிணையும் பகுதியைக் காண ஏதுவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரிச்சல்முனைப் பகுதிக்குச் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க, சாலையின் இரு புறங்களிலும் கருங்கற்கள் கொட்டப்பட்டிருக்கின்றன. ஆனாலும் காற்று மற்றும் புயல் காலங்களின்போது தடுப்புகளைத் தாண்டி, கடல்நீர் புகும். இதேபோல் கரையோரமிருக்கும் மணல் குன்றுகளும் காற்றின் வேகத்தால் கருங்கல் தடுப்புகளைத் தாண்டி, சாலைகளை மூடிவிடும்.

கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட பனை மட்டைத் தடுப்பு (ஃபைல் படம்)
கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட பனை மட்டைத் தடுப்பு (ஃபைல் படம்)
உ.பாண்டி

இந்தநிலையில், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில், கடந்த ஆண்டு செப்டம்பரில் பனை மட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். `கடல் சீற்றத்தின் முன் பனை மட்டை வேலி எப்படித் தாக்குப்பிடிக்கும்?’ என மீனவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நவம்பர் மாதம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய பனை மட்டைத் தடுப்புவேலிகள் மண்ணில் புதையுண்டு போயின.

மரக்கட்டைத் தடுப்புகள்
மரக்கட்டைத் தடுப்புகள்
உ.பாண்டி
அழியாத புயலின் சுவடுகளும் இடைவிடாது ஒலிக்கும் அழுகுரல்களும்! -வாசகர் பகிர்வு 
#தனுஷ்கோடி #MyVikatan

இதற்கிடையே தனுஷ்கோடி சர்ச் பகுதியில் மரக்கட்டையிலான தடுப்புவேலிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் அமைத்துவருகின்றனர். காற்றின் வேகத்தில் நகரும் மணல் குன்றுகள் நிறைந்த கடற்கரைப் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு, ஐந்தடி உயரத்தில் மூன்றடுக்கு மரக்கட்டைகளால் ஆன தடுப்புகளை அமைத்துவருகின்றனர். மணல் குன்றுகள நகர்வதைத் தடுக்க சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மரக்கட்டைத் தடுப்பு அமைக்கும் பணி.
மரக்கட்டைத் தடுப்பு அமைக்கும் பணி.
உ.பாண்டி

கடந்த ஆண்டு சோதனை முறையில் அமைக்கப்பட்ட பனை மட்டைத் தடுப்புகள் கடற்காற்று மற்றும் மணல் புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மண்ணுக்குள் புதைந்து போயின. வழக்கமாக அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை தனுஷ்கோடிப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பும் ஏற்படும். இந்தநிலையில் மணல் புயலைத் தடுக்க மரக்கட்டைகளால் ஆன தடுப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் அமைத்திருப்பதன் மூலம் மக்கள் பணம் அதிகாரிகளால் வீணடிக்கப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு