Published:Updated:

`2 கி.மீட்டர் தூரம், 99 தூண்கள், 101 இணைப்பு கர்டர்கள்!'- பாம்பனில் நவீன ஹைட்ராலிக் தூக்குப் பாலம்

தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. 22 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாகப் பெரிய மீன்பிடி படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும்.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் மாதிரி
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் மாதிரி

ராமேஸ்வரம் தீவினை நாட்டின் நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிக்கான மண் ஆய்வுப் பணி இன்று தொடங்கியது. இப்பணிகளைத் தொடர்ந்து புதிய பாலம் அமைக்கும் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ரயில் பாலம் அமைக்க மண் ஆய்வு
புதிய ரயில் பாலம் அமைக்க மண் ஆய்வு

புனித தலமாகவும் சுற்றுலா தலமாகவும் ராமேஸ்வரம் தீவினை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மேல் கடந்த 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர். இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 105 ஆண்டுகளை கடந்த இந்தப் பாலம் கடலில் வீசும் உப்புக் காற்றால் சமீப காலமாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்துள்ளதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.

Vikatan

இதையடுத்து மத்திய அரசு பாம்பன் கடல் மீது புதிய ரயில் பாலம் அமைக்க முடிவு செய்தது. ரூ.250 கோடி செலவில் அமைய உள்ள இந்தப் புதிய ரயில் பாலத்திற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பாலம் அமைப்பதற்கான பணிகளை ரயில்வே கட்டுமான நிறுவனமான R V N L தொடங்கியது.

புதிய ரயில் பாலம் கட்ட மண் ஆய்வுக்கான பூஜை.
புதிய ரயில் பாலம் கட்ட மண் ஆய்வுக்கான பூஜை.

இதன்படி மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையேயான நிலப்பகுதியினை இணைக்கும் வகையில் இரு வழிப்பாதை கொண்ட ரயில் பாலம் அமைய உள்ளது. இதற்கென தற்போதைய ரயில் பாலத்திலிருந்து 30 மீட்டர் முதல் 50 மீட்டர் வரையிலான தூரத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. 2 கி.மீ தூரத்திற்குக் கடலின் இடையே 99 தூண்கள் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட உள்ளன. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. சுமார் 22 மீட்டர் உயரம் கொண்ட இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும். இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் மனித சக்தி என 3 முறைகளிலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப் பணி இன்று காலை பாம்பன் மேற்கு கடற்கரைப் பகுதியில் தொடங்கியது. ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் சென்னை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிய பாலத்திற்கான தொழில்நுட்ப அலுவலர்கள் அன்பழகன், ராஜேந்திரன், பாலப் பணிகளை மேற்கொள்ள உள்ள அகமதாபாத் ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவன திட்ட அதிகாரி முகேஷ்பட்டேல், அப்துல்சமது ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தூண்கள் அமைய உள்ள இடத்தின் மண் மாதிரி சேகரிக்கப்பட்டது.

புதிய ரயில் பாலம் கட்டும் இடத்தில் மண் ஆய்வுப் பணி.
புதிய ரயில் பாலம் கட்டும் இடத்தில் மண் ஆய்வுப் பணி.

பாம்பன் பகுதியிலிருந்து தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் எனவும் கூறிய கட்டுமான நிறுவனத்தினர் கடலின் அடியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப தூண்களின் ஆழம் தேவையான அளவில் அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.