Published:Updated:

`திருமணச் செலவில் சேமித்த தொகை இது..!' - விருதுநகர் கலெக்டருக்கு ஆச்சர்யம் அளித்த மணமக்கள்

ஆட்சியரிடம் நிவாரணத் தொகை வழங்கிய மணமக்கள்
ஆட்சியரிடம் நிவாரணத் தொகை வழங்கிய மணமக்கள்

விருதுநகரில் திருமணம் முடித்த கையோடு மணக்கோலத்தில், திருமணத்துக்காகச் சேமித்த தொகை ரூ.50,000-த்தை மணமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கினால் திருமணம், சடங்கு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான எண்ணிக்கையில் மிக நெருங்கிய உறவினர்களுடன் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மகன், மகளின் திருமணங்களை விமரிசையாக நடத்த திட்டமிட்டிருந்த பெற்றோர்களும் எளிமையாகவே நடத்தி வருகிறார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலத்தில் சிக்கி சொந்த ஊர் திரும்ப முடியாத மணமகன் வீடியோ கால் மூலம் தாலி கட்டிய நிகழ்வுகளும் அரங்கேறின.

மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்
மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்

தற்போதைய ஊரடங்கு தளர்வால், இதுபோன்ற திருமண நிகழ்வுகளில் தற்போது 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருமணச் செலவில் குறிப்பிட்ட ஒரு தொகையை மணமக்கள் நலத்திட்ட உதவிகள், அரிசிப் பைகள் வழங்குதல், உணவளித்தல் என ஏதாவது ஒரு நற்காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

அவ்வகையில், விருதுநகரைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான சப்தமி மற்றும் கபில்ராஜ் ஆதித்யா ஆகியோர், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.50,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணனிடம் வழங்கினர். ஆட்சியரும் மணமக்கள் இருவரையும் பாராட்டினார்.

இதுகுறித்து மணமகள் சப்தமியிடம் பேசினோம், ``எங்க கல்யாணத்தைப் பெருசா நடத்த ரெண்டு பேர் வீட்லயும் திட்டமிட்டிருந்தாங்க. ஊரடங்கினால் கல்யாணத்தை ரொம்ப சிம்பிளாத்தான் நடத்தினோம்.

மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்
மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்

இந்த ஊரடங்கு நாள்களில் நடந்த கல்யாணங்களில் மணமக்கள் திருமணத் தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக அரிசி, மளிகை, காய்கறிப் பைகளை வழங்கியது, ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியது, ஆடைகள் வாங்கிக் கொடுத்தது, சானிடைசர், மாஸ்க்குகள் ஆகியவை வழங்கியது போன்ற நல்ல பணிகளைச் செய்து வந்தனர். இதுசம்பந்தமான செய்திகளைப் படிச்சேன்.

அதேபோல நாமளும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. குறைவான நாளில் நிவாரணப் பொருள்கள் வாங்குவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, எளிமையாக நடந்த திருமணத்தில் சேமித்த தொகையில் ஒரு பங்கான 50,000 ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக வழங்கலாம்னு நானும் என் கணவரும் பேசி முடிவு செய்தோம்.

மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்
மணமக்கள் சப்தமி- கபில்ராஜ்

இதற்குப் பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். அதன்படி, திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் கலெக்டர் ஆபீஸுக்குப் போனோம். கலெக்டர் சாரை சந்தித்து, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கான காசோலையைக் கொடுத்தோம். கொரோனா பாதிப்பால் இயல்புநிலை திரும்பும் வரை, அடுத்தடுத்த நாள்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் எங்களைப் போன்ற தம்பதிகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும்” என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு