Published:Updated:

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக உதயமானது செங்கல்பட்டு!- புதிய நலத்திட்டங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் 50 ரூபாய் கட்டணத்தில் இயங்கும். டிக்கெட் எடுத்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா

தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று கோட்டங்களில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் (புதியது) என 8 தாலுகாக்கள் அடங்கியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்ட வரைபடம்
செங்கல்பட்டு மாவட்ட வரைபடம்

புதிய மாவட்டத்தைத் துவக்கிய பின்னர் அமைச்சர்கள் உரையைத் தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ``எதிர்க்கட்சியைச் சேர்ந்த அத்தனை பேரும் இன்று டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோருவதற்காக இன்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க வலுவாக உள்ளது என சவால் விட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் தேர்தலை நிறுத்துவதற்கு டெல்லிக்கு ஓடுகிறார்கள். அவர்களுடைய வீரம் அவ்வளவுதான்” என்றார்.

அடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பஞ்சம்திருத்தி மற்றும் பண்டிதமேடு பகுதியில் புதிதாக தடுப்பணைகள் அமைக்கப்படும். அந்தத் தடுப்பணையில் 19 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டு அப்பகுதி வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும். மதுராந்தகம் வட்டம் செம்பூண்டி கிராமம் அருகே 4.5 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பை உலகமே உற்று நோக்கியது. மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மத்திய அரசின் உதவியோடு வளர்ச்சிப் பணிகள் முழுமையாக செயல்படுத்தப்படும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து தொல்லியல் சின்னங்களையும் சுற்றிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் 50 ரூபாய் கட்டணத்தில் இயங்கும். டிக்கெட் எடுத்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்.

வடகிழக்குப் பருவமழையின்போது கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்களை தோற்றுவிக்கின்றன. கொசு உற்பத்தியாகும் காலங்களில் அனைத்து ஏழை மக்களுக்கும் கொசுவலை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து மக்களுக்கும் கொடுக்கலாம் என்ற பெரும்பாலானவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். வேளாண்மையும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதி செங்கல்பட்டு மாவட்டம். புதிய மாவட்டம் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புற வேண்டும்” என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசத்தொடங்கியதுமே கூட்டம் கலையத் தொடங்கியது. அவர் பேசி முடிக்கும்போது 75 சதவிகித கூட்டம் அரங்கத்தை விட்டு வெளியேறியதைக் காணமுடிந்தது.