Published:Updated:

`3 கி.மீ-க்கு வாழைமரங்கள்; வாரியிறைக்கப்பட்ட கோடிகள்!’- திண்டுக்கல்லைத் திகைக்க வைத்த திருமணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத் துறையால் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகிய இருவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

திருமணம்
திருமணம்

திண்டுக்கல் - கரூர் சாலை போக்குவரத்து பிரச்னையே இல்லாத அமைதியான சாலை. டவுன் பஸ்ஸும் டாடா ஏஸ் வாகனங்களும் மட்டுமே அதிகம் பயணம் செய்யும் சாலை இது. ஆனால், நேற்றும் இன்றும் போக்குவரத்து நெரிசலில் திணறியது அந்தச் சாலை. இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த சொகுசுக் கார்களும் இன்று அந்தச் சாலையில் பயணித்தன.

ரத்தினம்
ரத்தினம்

நந்தவனபட்டி மேம்பாலத்தின் அருகிலிருந்து ஜி.டி.என் கல்லூரி வரை சாலையோரங்களில் 10 அடிக்கு ஒரு வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. இத்தனை பரபரப்பும் ஒரு திருமண நிகழ்வுக்கான ஏற்பாடு.

திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம் மகன் துரையின் திருமண விழா குறித்துதான் திண்டுக்கல் முழுக்க பேச்சாக இருக்கிறது. நேற்றுமுதல் சைவ, அசைவ விருந்து நடைபெற்று வருகிறது. ஆயிரம் ஆடுகள், ஆயிரக்கணக்கான கோழிகள் எனப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது விருந்தோம்பல்.

ஹெலிகாப்டர் என்ட்ரி; ரூ. 90 லட்ச பண மழை!- கிராம மக்களை திகைக்கவைத்த தொழிலதிபர் திருமணம்

திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள ஜி.டி.என் கலைக் கல்லூரியின் சேர்மன் ரத்தினம். சர்வேயர் ரத்தினம் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் சர்வேயராக பணியாற்றியவர். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். இன்றைக்கு மாவட்டத்தின் முக்கிய தொழிலதிபராக இருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத் துறையால் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அந்தநேரத்தில் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகிய இருவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் சைக்கிளில் வலம் வந்த ரத்தினத்தின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திருமணம்
திருமணம்
திருமணம்
திருமணம்

இந்தநிலையில், இன்று நடைபெற்ற திருமணத்தில் கட்சி பேதம் இல்லாமல் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணச் செலவு மட்டும் சில கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.

மாவட்டத்தின் பெரும்பாலான அரசு அலுவலர்கள் திருமண வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். மின்சாரத் துறை, நேற்று முதல் அந்தப் பணிக்காக தனியாக ஆட்களை நியமித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாலை சரிசெய்யும் பணி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து சீரமைப்பு என தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது. திருமணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், திருநாவுக்கரசர் எம்.பி, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வு முடிந்த பிறகே மீண்டும் அமைதியாகி இருக்கிறது திண்டுக்கல் - கரூர் சாலை.