Published:Updated:

`கொரோனா ஊரடங்கு.. பொதுமக்களுக்கு ஹெல்ப் லைன் திட்டம்!’ - ஒன்றியக் கவுன்சிலரைப் பாராட்டும் மக்கள்

மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர்
மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர்

பொருள்வாங்கிக் கொண்டு கொடுப்பவர்களிடம் டிப்ஸ் எதுவும் வாங்கக் கூடாது, அதே நேரத்தில் போன் செய்தால் அரைமணி நேரத்தில் அந்தப் பொருளை அவர்களின் கையில் சேர்த்து விட வேண்டும் எனக் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளேன்.

மன்னார்குடியில் ஒன்றியக்கவுன்சிலர் ஒருவர் ஹெல்ப் லைன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி தனது வார்டில் உள்ள மக்கள் போன் செய்து கூறும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கித் தருகிறார். இதற்காக இரண்டு இளைஞர்களையும் நியமித்துள்ளளார். கொரோனா பாதிப்பிற்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் கொரோனா பிரச்னை முடிந்த பிறகும் தொடரும் என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும் அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

பணியில் இளைஞர்
பணியில் இளைஞர்

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மணிகண்டன். அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர், தனது வார்டில் உள்ள மக்கள் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்கவும், வெளியே வராமல் இருப்பதற்காகவும் ஹெல்ப் லைன் என்ற திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளார். இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடங்கி அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும் வகையில் அசத்தி வருகிறார்.

144 தடை உத்தரவால் வெளியே வராமல் இருக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் தேவைபட்டால் உடனே அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இரண்டு இளைஞர்களை நியமித்துள்ளார். 13-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் போன் செய்தால் அந்தப் பொருளை உடனே வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே கொடுத்து விட்டு பின்னர் அதற்குரிய பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். ஒன்றிய கவுன்சிலரின் இந்தச் செயல் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

கொரோனா பணியில்
கொரோனா பணியில்

இது குறித்து மணிகண்டனிடம் பேசினோம், ‘கொரோனா பரவாமல் இருப்பதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்படக்கூடாது என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் என் வார்டில் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என நினைத்து ஹெல்ப் லைன் திட்டத்தைத் தொடங்கினேன்.

அதன்படி வெளியே சென்று மருந்து, மளிகை, பால் உள்ளிட்ட பொருள்கள் வாங்க முடியாத யாராக இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம் எனச் செல் நம்பர் அச்சிடப்பட்டு நோட்டீஸை வார்டு முழுவதும் உள்ள வீடுகளில் கொடுத்தேன். பொருள்களை வாங்கிக் கொடுப்பதற்காக பிரவீன், மனோஜ் என இரண்டு இளைஞர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என போன் செய்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டு அதற்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். இதற்காக தலா ஒரு இளைஞருக்கு ரூ.15,000 சம்பளம் தருகிறேன். தினமும் பெட்ரோலுக்கு என ரூ.100 கொடுத்து விடுகிறேன்.

மணிகண்டன்
மணிகண்டன்

பொருள்வாங்கிக் கொண்டு கொடுப்பவர்களிடம் டிப்ஸ் எதுவும் வாங்கக் கூடாது. அதே நேரத்தில் போன் செய்தால் அரைமணி நேரத்தில் அந்தப் பொருளை அவர்களின் கையில் சேர்த்து விட வேண்டும் எனக் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளேன். கடந்த 15ம் தேதியிலிருந்து இவை செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாலும் வயதானவர்கள், பெண்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாலும் கொரோனா முடிந்த பிறகும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு