Published:Updated:

துணை முதல்வர் நேரில் ஆய்வு! - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit

அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்

சுர்ஜித் மீட்புப் பணியை ஆய்வு செய்யும் அமைச்சர்கள்
சுர்ஜித் மீட்புப் பணியை ஆய்வு செய்யும் அமைச்சர்கள்

அமைச்சர்களுடன் மீட்பு பணியை பார்வையிட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்

சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க முதல் ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. குழியில் பாறைகள் உள்ளதால் அவற்றை தோண்டுவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. அதனால் ராமநாதபுரத்திலிருந்து 2வது ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் வில்சன் மீட்புப் பணியை பார்வையிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

இரண்டாவது ரிக் இயந்திரமானது முதல் இயந்திரத்தை விட 3 மடங்கு அழுத்தத்தை செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதன்மூலம் ஏறக்குறைய 3 அல்லது 4 மணி நேரத்தில் சுமார் 20 அடி ஆழம் வரையில் குழி தோண்டிவிட முடியும் என்கிறார்கள். இரண்டாவது ரிக் இயந்திரத்தைப் பொருத்தும் பணி நடைபெறு வருகிறது. இந்தநிலையில், முதல் ரிக் இயந்திரத்தின் உருளையில் கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து, அந்தக் கோளாறை ஊழியர்கள் சரிசெய்த பின்னர், சிறிய தாமதத்துக்குப் பின்னர் குழிதோண்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், `நாடே தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதேநேரம், தமிழகமோ, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்க நேரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. சிறுவன் சுர்ஜித் விரைவில் மீட்கப்பட்டு, அவரது பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் ட்வீட்
ராகுல் ட்வீட்

சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 40 மணிநேரங்களை கடந்துவிட்டது. அதிநவீன ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணற்று அருகே 3 மீ இடைவெளியில் மற்றொரு துளை தோண்டப்பட்டு வருகிறது. ஒரு மீட்டர் அகலகத்தில் ஒரு நபர் உள்ளே செல்லும் அளவில் அந்தக் குழி தோண்டப்படுகிறது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளே சென்று குழந்தையை மீட்பதுதான் திட்டம்.

மீட்பு பணி
மீட்பு பணி

அதன்படி ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் தொடங்கியது. முதல் 15 நிமிடத்தில் 3 அடி ஆழம் அளவுக்கு தோண்டப்பட்டது. அடுத்தடுத்து 10 அடி வரை விரைவாக தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின் தோண்டுவதில் சிக்கல் எழுந்தது. 10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டது. ரிக் இயந்திரத்தால் பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 4 மணிநேரங்களுக்கு மேலாகியும் 28 அடி கூட தோண்டி முடியவில்லை.

இதுதொடரபாக ரிக் வண்டி ஊழியர்களிடம் பேசியபோது, ``ஒரு முறை ரிக் இயந்திரம் மண்ணுக்குள் செலுத்தினால் ஒரு அடியாவது தோண்டிவிடும். மணல் என்றால் வேலை ஈசியாக முடிந்துவிடும். ஆனால் இங்கு பாறைகளாக இருப்பதால் பாறைகளை குடைந்து மணலாக்குவதற்கு மேலும் தாமதம் ஆகிறது. முதலில் 30 அடிக்கு கீழ் தான் பாறைகள் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதனால் 100 அடியை 5 மணிநேரத்துக்குள் தோண்ட திட்டமிட்டோம். ஆனால் 10 அடிக்கு கீழேயே பாறைவந்துவிட்டது. இதனால் மேலும் காலதாமதம் ஆகிறது" என்றனர்.

துணை முதல்வர் நேரில் ஆய்வு! - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit