நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் பழனிவேல். கூலித்தொழிலாளியான இவர், அன்றாடம் கிடைக்கும் வேலையைப் பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இவரும், இவரின் நண்பரும் சேலம் சாலையில் சொந்த வேலையாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு எதிரே ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவர்களை வேகமாகக் கடந்து சென்றிருக்கிறார். அப்போது, அந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பை ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது. அதைக் கண்ட பழனிவேல், வேகமாக சென்று அந்த பையை எடுத்திருக்கிறார். கையோடு அந்த பையைத் திறந்து பார்த்த பழனிவேலுக்கு அதிர்ச்சி. அந்த பைக்குள் மெபைல் போன் ஒன்றும், ரூ.15,000 பணமும் இருந்துள்ளது. 'இதை நாமே வைத்துக்கொள்வோம்' என்று ஒருநொடிகூட யோசிக்காத பழனிவேல், அந்தப் பையை நேராக எடுத்துச் சென்று, குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ரவியிடம் ஒப்படைத்தார்.

கூலித்தொழிலாளி பழனிவேலின் நேர்மையைப் பாராட்டிய இன்ஸ்பெக்டர் ரவி, பையில் இருந்த பர்ஸில் இருந்த போன் நம்பரில் தொடர்புகொண்டு, அந்தப் பை குறித்து தகவல் கொடுத்திருக்கிறார். அப்படி பையைத் தவறவிட்டவர், வட்டமலை பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பது தெரியவந்தது. அவரும் தினமும் கூலிவேலை பார்ப்பவர். இதனால், ஆய்வாளர் ரவி, பழனிவேலை வைத்து, அர்ஜூனனிடம் அந்தப் பணப்பையை ஒப்படைக்க வைத்தார்.
'அவசர தேவைக்காக கொண்டு சென்ற பணம். பையோடு தொலைந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால், பழனிவேல் அதை மீட்டுக் கொடுத்துட்டார்' என்று பழனிவேலுக்கும், ஆய்வாளருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பையை நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குப் புறப்பட்டார் அர்ஜூனன். இதற்கிடையில், ஏழ்மையாக இருந்தும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் அதை நேர்மையாகக் கொண்டுவந்து ஒப்படைத்த கூலித்தொழிலாளி பழனிவேலின் நல்ல மனதை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.
இந்நிலையில், தனது நேர்மை குறித்து பலரும் பாராட்டுவதைக் கேட்ட பழனிவேல்,
"நானே கூலிவேலைப் பார்த்து வாழ்ந்துட்டு இருக்கேன். உழைக்குற காசே உடம்புல ஒட்டமாட்டேங்குது. இதுல, அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு? அந்த காசை, அதுக்கு உரியவங்க என்ன அவசரத் தேவைக்காக எடுத்துட்டுப் போனாங்களோ? இந்தப் பணத்தை நான் வச்சுக்கிட்டா, அதனால் ஏற்படுற பாவத்தை நான் எந்த கோயிலுக்குப் போனாலும் போக்கிக்கொள்ள முடியாது. அதான், பையை எடுத்ததும் நேரா போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் கொடுத்துட்டேன்" என்றார் அவரது நேர்மைக்கு ராயல் சல்யூட் வைக்கின்றனர் மக்கள்.