Published:Updated:

முள், கட்டை, கற்களால் அடைக்கப்பட்டுள்ள தெருக்கள்! - திணறும் தேனி சுகாதாரத்துறையினர்

முள்களால் அடைக்கப்பட்டுள்ள தெரு
முள்களால் அடைக்கப்பட்டுள்ள தெரு

தேனி மாவட்டம் போடியில், சில தெருக்களில், யாரும் நுழையாதவாறு, முள், கட்டை, கற்களைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் தெருக்களுக்குள் சென்று, பணி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்த 53 வயதுடைய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்றுள்ளோர்கள் எனக் கண்டறியப்பட்டு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 23 நபர்களில் பெரும்பாலானோர் போடி நகரைச் சேர்ந்தவர்கள்.

கட்டையால் அடைக்கப்பட்டுள்ள தெரு
கட்டையால் அடைக்கப்பட்டுள்ள தெரு

அதனால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், போடி நகரை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது மாவட்ட காவல்துறை நிர்வாகம். அதன்படி, கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் வசித்த பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று, ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

`18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!' - தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’

இந்த நிலையில், கொரோனா தொற்றுள்ளோரில் பெரும்பாலானோர் போடி நகரைச் சேர்ந்தவர்கள் என செய்தி வெளியானதும், அதிர்ச்சியடைந்த போடி நகர மக்கள், தங்கள் தெருக்களில், வெளி ஆட்கள் நுழையாதவாறு தடுப்பதற்காக, முள்கள், கட்டைகள், கற்களைக் கொண்டு தெரு வாயிலை அடைத்துள்ளனர். இதனால், ஆய்வுப்பணியில் உள்ள சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிரமத்தைச் சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

முள்களால் அடைக்கப்பட்டுள்ள தெரு
முள்களால் அடைக்கப்பட்டுள்ள தெரு

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சுகாதாரத்துறைப் பணியாளர் ஒருவர், ``டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் குறித்த லிஸ்ட் கிடைத்தது முதல் இப்போது வரை இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம். போடி நகரில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கும், யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்யவும் வீடு வீடாகச் சென்று சோதனை செய்கிறோம். ஆனால், சில தெருக்களில், தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முள், கட்டைகளைக் கொண்டு அடைத்துவைத்துள்ளனர். இதனால், எங்கள் வாகனம் செல்ல முடிவதில்லை. சில தெருக்களில் நடந்து கூட செல்ல முடிவதில்லை. அந்த அளவுக்கு முள்களைப் போட்டுவைத்துள்ளனர். அவர்கள் நன்மைக்காகத் தான் வீடு வீடாக வருகிறோம். அதைப் புரிந்துகொள்ளாமல், இப்படிச் செய்வது கஷ்டமாக இருக்கிறது. இருந்தபோதும், போலீஸார் உதவியுடன் வேலை தொடர்ந்து நடந்துவருகிறது.!” என்றார்.

'70 ஆயிரம் மாஸ்க்; 16 குழுக்கள்' -மாஸ் காட்டும் தேனி மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
அடுத்த கட்டுரைக்கு