Published:Updated:

மிரட்டிய மர்ம நபர்.. பணம் வாங்கிய ஏஜென்ட்!- நீட் வழக்கில் என்ன நடந்தது?

போலியான சான்றிதழ்கள் தயார் செய்த அந்த ஏஜென்ட் யார்? மிரட்டிய அந்த நபர் யார்? பெற்றோர்களை வைத்து அவர்களை எளிதில் பிடித்திருக்கலாம்.

udit surya
udit surya

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு நாளுக்கு நாள் வெவ்வேறு கோணங்களில் சென்றுகொண்டிருக்கும் சூழலில், இன்று கைது செய்யப்பட்ட அபிராமி, பிரவீன், ராகுல் ஆகியோரது வழக்கறிஞர் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. நம்மிடம் பேசிய வழக்கறிஞர் விஜயகுமார், "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா பற்றி நான் பேசவில்லை. இன்று கைது செய்யப்பட்டிருக்கும் ராகுல் மற்றும் பிரவீன் ஆகிய இருவருக்காக மட்டுமே பேச வந்திருக்கிறேன். இருவரும் சென்னை ஓ.எம்.ஆரில் இயங்கிய பிரிஸ்ட் கல்லூரியில் படித்தவர்கள். நீட் தேர்வு வந்ததும் கல்லூரி மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

abirami
abirami

சென்னை ஆவடியில் நீட் தேர்வு எழுதினர். அதற்கான ஆதாரம் உள்ளது. எல்லோருடைய பெற்றோர் போல, ராகுல், பிரவீன் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். அப்போது ஒரு ஏஜென்ட் இவர்களை அணுகி, நேரடியாக மருத்துவக்கல்லூரி முதல்வரை சந்தித்து மெடிக்கல் சீட் வாங்கிக்கொடுக்கிறேன் என்கிறார். அதனை நம்பி இவர்களும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களை கொடுக்கிறார்கள். அந்த ஏஜெண்ட், சான்றிதழ்களை மாற்றி, போலியாக தயார் செய்து சீட் வாங்கிக்கொடுக்கிறார். இது நடந்து முடிந்ததும், சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வருகிறது. 'நீங்கள், உங்கள் பிள்ளையை எப்படி கல்லூரியில் சேர்த்தீர்கள் என எனக்கு தெரியும். எனக்கு 2கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால், உண்மையை வெளியே சொல்லிவிடுவேன்' என்கிறான் ஒருவன். பதறிப்போன பெற்றோர்கள், ஏஜென்ட்டை தொடர்புகொள்கிறார்கள். பயனில்லை.!

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்... 
20 லட்சம் வாங்கிய ஏஜென்ட் யார்?

இந்நிலையில், உதித் சூர்யா விவகாரம் வெளியே வருகிறது. அதனை வைத்து மீண்டும் பெற்றோர்களை மிரட்டுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். நான், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்கிறேன். அந்த ஏஜென்ட், போனில் மிரட்டல் கொடுத்த நபர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என கேட்கிறேன். ஆனால், அதனை செய்யாமல், இரண்டு மாணவர்கள் அவர்களது தந்தைகள் ஆகியோரை அழைத்துவந்து கைது செய்துவிட்டார்கள். இது நியாயமான செயல் இல்லை. போலியான சான்றிதழ்கள் தயார் செய்த அந்த ஏஜென்ட் யார்? மிரட்டிய அந்த நபர் யார்? பெற்றோர்களை வைத்து அவர்களை எளிதில் பிடித்திருக்கலாம்.

வழக்கறிஞர் விஜயகுமார்
வழக்கறிஞர் விஜயகுமார்

ஆனால், வேண்டுமென்றே சி.பி.சி.ஐ.டி இப்படி நடந்துவிட்டது. இருவரையும் பிடித்துவிட்டு பெற்றோர்களையும், மாணவர்களையும் கைது செய்யுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். அதை விட்டுவிட்டு ஏஜென்ட்டையும், மிரட்டல் நபரையும் தப்ப விட்டது மட்டுமல்லாமல், இன்னும் பல மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மிரட்டி பணம் பறிக்க இவர்களே வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்கள்." என்றார். கேரளாவைச் சேர்ந்த நீட் ஏஜென்ட் ஒருவரை தேடுவதாக சி.பி.சி.ஐ.டி சொல்கிறதே? என கேள்வி எழுப்பிய போது, "அதெல்லாம் பொய். சென்னையைச் சேர்ந்தவர் தான் அந்த ஏஜென்ட்.! இவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.!" என்றார் அழுத்தமாக.

`வருகைப்பதிவேட்டில் பிரசென்ட்.. பின்னர் திருத்தம்'- நீட் வழக்கில் டீனால் சிக்கிய பேராசிரியர்கள்?