Published:Updated:

`ஓட்டுநர்கள் செய்யக்கூடாத தவறு என்ன?!' -சரியான விடை சொன்னவர்களை ஆச்சர்யப்படுத்திய நெய்வேலி ஆர்.டி.ஓ

`குட் சமாரிட்டன்' என்கின்ற திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுகின்றவர்கள் தங்களை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஆர்.டி.ஓ
ஆர்.டி.ஓ

இந்தியாவில் நாளுக்குநாள் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதுவும் தமிழகத்தில்தான் அதிகப்படியான விபத்துகள் நடக்கின்றன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் களைய வேண்டும் என்றால், போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

நெய்வேலியில் ஆட்டோ, கார், லாரி ஓட்டுநர்களுக்கென போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நெய்வேலி ஆர்.டி.ஓ பிரான்சிஸ், ``தரமான ஓட்டுநர்களை உருவாக்குவதே என் லட்சியம். சாலை விபத்துகளைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை மக்கள் மேற்கொள்ளவேண்டும்.

கருத்தரங்கில் ஆர்.டி.ஓ.
கருத்தரங்கில் ஆர்.டி.ஓ.

சாலை விதிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தால் பெரும்பாலான விபத்துகளைக் தவிர்க்கலாம்" என்றார். கூட்டத்தில் பேசியது மட்டுமல்லாமல், கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கும் அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கருத்தரங்கின் இறுதியில், ஓட்டுநர்களிடம் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்டார் பிரான்சிஸ். `மலையிலிருந்து இறங்கும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் வாகனத்தை எப்படி நிறுத்த வேண்டும்?', `சாலையில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் எதைக் குறிக்கின்றன?', `பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளைக் கடக்கும்போது ஓட்டுநர்கள் செய்யக் கூடாதது என்ன?' என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டார். இதற்குச் சரியான பதிலைக் கொடுத்த ஓட்டுநர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச இன்ஷூரன்ஸை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.

ஆர்.டி.ஓ
ஆர்.டி.ஓ

ஆர்.டி.ஓ பிரான்சிஸிடம் பேசினோம். ``தினந்தோறும் நடக்கும் விபத்துச் செய்திகளைப் படிக்கும்போகும் அவ்வளவு வேதனையாக இருக்கும். இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என எண்ணினேன். எனவே, ஓட்டுநர்கள் மட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச்சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்" என்றவர்,

``சாலைகளில் விபத்து நடந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் பலரும் கடந்துவிடுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்கள் பிழைக்கவில்லை என்றால் தங்கள் மீது வழக்கு வந்துவிடும் என்கின்ற அச்சம்தான்.

ஆனால், உண்மை என்னவென்றால் 'குட் சமாரிட்டன்' என்கின்ற திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுகின்றவர்கள் தங்களை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். விருப்பமில்லையெனில் தங்களின் சுய விவரங்களை காவல்துறையினரிடமோ அல்லது மருத்துவரிடமோ தெரிவிக்கவும் தேவையில்லை" என்றார் உறுதியான குரலில்.