`சுற்றுலா நோக்கத்துடன் வந்தால்...’ - பேரிடர் மேலாண்மை சட்டத்தை சுட்டிக்காட்டிய நீலகிரி ஆட்சியர்
'சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டாம். சுற்றுலா நோக்கத்தோடு அத்துமீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திலும் 150 -க்கும் அதிகமான பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ``நீலகிரியில் சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையிருந்தால் மட்டும் மாவட்டத்திற்குள் வரலாம். அவசியமின்றி மாவட்டத்துக்குள் வர வேண்டாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா நோக்கில் வாகனங்களிலும், பேருந்துகளிலும் யாரும் வர வேண்டாம். மீறி வந்தால், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி நடவடிக்கை பாயும்.
இங்கு வெளி நபர்கள் யாரேனும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விடுதிக்கு சீல் வைக்கப்படும்.
நீலகிரி மாவட்ட போக்குவரத்துக் கழகத்திலிருந்து 160 அரசு பஸ்கள் மாவட்டத்துக்குள்ளும், பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டுவருகின்றன. முதல் மண்டலமான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சமவெளி பகுதியில் இருந்து நீலகிரிக்கு பேருந்தில் பயணம் செய்பவர்களின் முகவரி மற்றும் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில், பர்லியார் சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்படும். மக்கள் அதிகமாகக் கூடினாலோ, தேவையில்லாத நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டாலோ 1077 எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு, தற்போது வரை ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மற்றும் சென்னையிலிருந்து விமானம்மூலம் கோவை வந்த ஊட்டி மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

முடிவுகள் வருவதற்குள் இவர்கள் ஊட்டி மற்றும் கோத்தகிரி வந்து விட்டனர். பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று முன்தினம் இரவே இருவரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.