நீலகிரியைப் பொறுத்தவரை பந்தலூர், கூடலூர், ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையும், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையும் தீவிரமாகக் காணப்படுவது வழக்கம்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் உறைபனி நிலவிவந்த நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான்காவது நாளாக இன்றும் இடைவிடாது தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி கொடநாடு 40 மி.மீ., குன்னூர் 35 மி.மீ., கெத்தை 35 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக கேத்தி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதி தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீதமுள்ள பகுதி இடிந்துவிழும் அபாயத்திலுள்ளது.

மேலும், கோத்தகிரி பகுதியில் ஒருவரின் வீடு இடிந்து சேதமடைந்திருக்கிறது. குன்னூர்- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சாலையோரங்களில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்ந்து தீவிரமடைந்தால் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம்,``இந்த வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 42 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மழை வெள்ளம் சூழும் அபாயமுள்ள பகுதிகளைக் கண்காணித்துவருகிறோம். பேரிடர் அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் 283 பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 456 மீட்பு முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவசரத் தேவைகள், பாதிப்புகள் மற்றும் அபாயகர மரங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடங்கள் குடியிருப்பு அருகில் இருந்தால் உடனடியாக 1077 என்ற கட்டுப்பாட்டு மைய இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம்'’ எனத் தெரிவித்திருக்கிறது.