நீலகிரி: `பொன்னானி ஆற்றின் தடுப்பு சுவரில் உடைப்பு!’ - தீவிரமடையும் பருவ மழை

இந்த மழை காரணமாகக் கூடலூர் தேவாலா பகுதியில் ஆற்றின் தடுப்புச் சுவரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓவேலி பகுதியில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மீட்புப் படையினர் சீரமைத்தனர்.
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இணையும் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் எதிர்பார்த்த அளவுக்குப் பொழியும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகக் கடுமையான வறட்சி அல்லது பெருமழை பெருவெள்ளம் என்ற நிலையே தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் மொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு மிகவும் தாமதமாகவே தொடங்கி, குறைந்த அளவிலேயே பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

கூடலூர், பந்தலூர், தேவாலா, அப்பர் பவானி, அவலாஞ்சி, ஊட்டி, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாகத் தேவாலாவில் 145 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 879 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக் காரணமாகக் கூடலூர் தேவாலா பகுதியில் பொன்னானி ஆற்றின் தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓவேலி பகுதியில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மீட்பு படையினர் சீரமைத்தனர்.
இடைவிடாது பெய்து வரும் மழைக் காரணமாக பைக்காரா, குந்தா, எமரால்டு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழையின் தீவிரம் குறித்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் நம்மிடம் பேசுகையில்,``இந்த வருஷம் அப்பப்போ கொஞ்சம் மழை கெடச்சது. ரெண்டு மாசத்துக்கு முன்னால ஆரம்பிக்க வேண்டிய மழை இந்த வருஷம் இப்போதான் தொடங்கி இருக்கு. தேவாலால நல்ல மழை கிடைச்சிருக்கு. இந்த மழை இப்படியே தொடர்ந்தால் விவசாயத்துக்கு பயனா இருக்கும். பவானி ஆத்துலையும் நீரோட்டம் நல்லா இருக்கும்" என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கைளின் முன்னேற்பாடு குறித்து மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. போதுமான அளவு உபகரணங்களுடன் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்போம். எந்தத் தாமதமும் இருக்காது" என்றனர்.