Published:Updated:

கொடநாட்டில் கொட்டித்தீர்த்த கனமழை; கடும் மண்சரிவு - நீலகிரியில் இரவு பகலாக நடக்கும் மீட்புப்பணி

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக மீட்புத் துறையினர் களத்தில் உள்ளனர்.

land slip
land slip

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்றாவது நாளாக நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை தற்போதுவரை தொடர்ந்து பெய்துவருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, குந்தா, ஊட்டி ஆகிய பகுதிகளில் கனமழை நீடிக்கிறது. மழையின் காரணமாக இந்த நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

land slip
land slip

தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் 2-ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கருதி ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 822 .7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கொடநாட்டில் 142 மி.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

நேற்று பெய்த மழையால் குன்னூர் மஞ்சூர் சாலையில் கரும்பாலம் அருகில் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி காந்தள் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்தார். மூன்று வீடுகள் சேதம் அடைந்தன.

land slip
land slip

இந்த நிலையில், மீண்டும் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் 5 இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும், பாறைகளும் சரிந்து விழுந்ததால் நள்ளிரவில் கோத்தகிரி வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதேபோல் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 6 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதை உடனடியாக அகற்றி போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

குன்னூர் பெட்போர்டு பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. இதேபோல் குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள வீட்டின் முன்பக்க பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

land slip
land slip

ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. இரவு பகல் பாராமல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புத்துறையினர், மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைப் பணியாளர்கள் என களத்தில் நின்று சீரமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை நீடிப்பதால் மண் சரிவு அபாயமும் நீடிக்கிறது.