Published:Updated:

நீலகிரி: `மலை ரயில் சேவை விரைவில் தொடங்கும்!' - தென்னக ரயில்வே

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

தற்போது வரை இ-பாஸ் நடைமுறையிலுள்ள நீலகிரி மாவட்டத்தில், மலை ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், வரும் 10-ம் தேதி முதல் உதகை- குன்னூர் இடையே மலை ரயில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதியே சுற்றுலாவுக்குத் தடைவிதித்து, சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி தாவரவியல் பூங்கா

நாடு முழுவதும் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்‌ அடிப்படையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டன.

தற்போது வரை இ-பாஸ் நடைமுறையிலுள்ள நீலகிரி மாவட்டத்தில், இன்றளவும் இ-பாஸ் முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி தாவரவியல் பூங்கா

பூங்காக்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் வனத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும்,‌ நீலகிரியின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றான மலை ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி சுற்றுலாப் பயணிகளிடம் இருந்துவந்தது.

`6 நாடுகள்; ரூ.2.66 லட்சம் வாடகை; நீராவி இன்ஜின்!'- 20 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்திய மலை ரயில்

இந்தநிலையில், வரும் 10-ம் தேதியிலிருந்து ஊட்டி- குன்னூர் இடையே மலை ரயில் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

மலை ரயில் சேவை தொடக்கம் குறித்து நம்மிடம் பேசிய தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர்,``நீலகிரியில் கட்டுப்படுத்தப்பட்ட வரைமுறையில் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மலை ரயில் சேவையை வழங்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்திவருகின்றனர். இதை ஏற்று முதற்கட்டமாக ஊட்டி- குன்னூர் இடையே இயக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஓரிரு நாள்களில் தொடங்கப்படும்" என்றார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது,``நீலகிரிக்குள் வர ஒரு நாளைக்கு 150 சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்குகிறோம். மலை ரயிலை இயக்க அனுமதி வேண்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு