Published:Updated:

ஊட்டியை மிரட்டும் கோயம்பேடு.. ஓட்டுநர்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை தேடும் அதிகாரிகள்!

coonoor
coonoor

நீலகிரி மாவட்டத்திலிருந்து கோயம்பேடு சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் தற்போதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 9 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீட்டுக்கண்காணிப்பில் இருந்தனர். தற்போது அவர்களின் தனிமைக் காலமும் முடிவுற்ற நிலையில், தற்போதைக்கு கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி உள்ளது.

Corona Virus
Corona Virus

ஆரஞ்சில் இருந்து பச்சை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நீலகிரிக்கு கோயம்பேடு சென்று திரும்பியவர்களால் நோய் தொற்று பரவல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

ஊட்டிக்கும் கோயம்பேட்டுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும் கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் 20-க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவது தெரியவந்துள்ளது.

lorry
lorry

கொரோனா பரவலின் புதிய ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மாறியுள்ள நிலையில், கோயம்பேடு சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்களின் பட்டியலைத் தேடிப்பிடித்து தயார் செய்து வருகின்றனர். மேலும், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை குன்னூரின் பர்லியார், கோத்தகிரியின் குஞ்சப்பனை ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், ``அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிக்கொண்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்பும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மருத்துவ முகாம் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஊட்டியில் நடத்தப்பட்டது. அவர்களிடமிருந்து கொரோனா சோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரி ஓட்டுநர்கள் வெளியூர் சென்று வந்த விவரம், செல்போன் எண்களும் பதிவு செய்யப்பட்டன.

coonoor
coonoor

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்குச் சென்று வந்த லாரி டிரைவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களிடமிருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 150 பேரை கண்காணித்து வருகிறோம். 40 நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு