Published:Updated:

`ஊட்டிக்குப் படையெடுக்கும் வாகனங்கள்!' -காவல்துறை அதிரடியால் கலங்கும் சரக்கு வாகன ஓட்டுநர்கள்

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களின் இயக்கம் அதிக அளவில் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்றாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை விளங்கிவருகிறது. சமவெளிப் பகுதிகளில் இருந்து வரக்கூடிய மக்கள் இந்த மலைப்பாதை வழியாகத்தான் அதிகம் பயணிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை உள்ளது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை
மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், பிற மாநில மற்றும் மாவட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்தின்றி இந்தச் சாலைகள் வெறிச்சோடின. இதனால் வன விலங்குகளும் சுதந்திரமாக வலம் வந்தன.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கின் சில தளர்வுகளுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா நோக்கத்தில் வருபவர்களுக்கு தடை உள்ள போதிலும், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதிகப்படியான வாகனங்கள் வருவதால் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினரால் விவரங்களைச் சேகரிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ooty  town
ooty town

இதைச் சமாளிக்க இன்று முதல் நீலகிரிக்கு வரும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும் என‌ காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறியிருப்பதாவது:

கடந்த 1-ம் தேதி முதல் முழு அடைப்பானது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களின் இயக்கம் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை முறைப்படுத்தும்விதமாக இன்று 5-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து கனரக வாகனங்களும் கோத்தகிரி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும்.

 சசிமோகன்
சசிமோகன்

எக்காரணத்தைக் கொண்டும் இதர மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவாக பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி கிடையாது. மேலும், உள்ளூர் மக்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு தங்களின் முகவரியைக் கொண்ட அடையாள அட்டையை கண்டிப்பாக சோதனைச் சாவடிகளில் தணிக்கையின்போது காண்பிக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத்‌ தெரிவித்துள்ளார்.

`மொத சவாரியே 3 மணிக்குத்தான் வருது...' - ஊட்டி நிலவரத்தால் கலங்கும் ஆட்டோ டிரைவர்கள்

இதுகுறித்து சரக்கு வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ``கார் உள்ளிட்ட சிறியரக வாகனங்களை அவர்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்ப குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக அனுமதிக்கலாம்.

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை

ஒட்டுமொத்தமாக சரக்கு வாகனங்களை கோத்தகிரி சாலை வழியாக சுற்றி அனுப்பவுதன் மூலம் அதிகளவு நேரம் மற்றும் டீசல் விரயம் ஏற்படும். இதை மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு