Published:Updated:

நீலகிரி: தபால்காரர் சிவனுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்! - நெகிழவைத்த கர்நாடக பா.ஜ.க எம்.பி

தபால்காரர் சிவன்
தபால்காரர் சிவன்

மலைக் கிராமங்களுக்கு நாள்தோறும் 15 கி.மீ நடந்தே சென்று முதியோர் உதவித்தொகை முதல் தபால்கள் வரை அனைத்தையும் ஒருநாள்கூட தாமதிக்காமல் வழங்கிவந்தார் சிவன்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவன். இவர் 1985-ம் ஆண்டு தனது 30-வது வயதில் குன்னூர் வெலிங்டன் தபால் நிலையத்தில் பகுதி நேர ஊழியர் பிரிவில் தபால் தலை விற்பனையாளராகப் பணியில் சேர்ந்தார்.

தபால்காரர் சிவன்
தபால்காரர் சிவன்

2010-ம் ஆண்டு ஹில்குரோவ் கிளை தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். நீலகிரியிலேயே தபால் பட்டுவாடா செய்ய எளிதில் அணுக முடியாத கடினமான இடங்களில் விருப்பத்துடன் கடமையாற்றி மலைவாழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

இவருக்கு ஒதுக்கப்பட்ட கீழ் சிங்கரா, ஹில்குரோவ், வடுகன் தோட்டம், குறும்பாடி, மரப்பாலம் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு நாள்தோறும் 15 கி.மீ நடந்தே சென்று முதியோர் உதவித்தொகை முதல் தபால்கள் வரை அனைத்தையும் ஒருநாள்கூட தாமதிக்காமல் வழங்கிவந்தார்.

postman sivan
postman sivan

இவர் செல்லும் 15 கி.மீ தூரமும் கடுமையான இடர்ப்பாடுகள் நிறைந்தது. யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த வனப்பகுதி. பாறை சரிவுகள், பல் சக்கர தண்டவாளங்கள், ரயில் பாதை சுரங்கங்கள், காட்டருவிகள் என நாள்தோறும் உயிரைப் பணயம் வைத்துக் கடமையாற்றிய இவரது சேவை, நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

``இரண்டே நாளில் 1,500 புதிய கணக்குகள்!” - ரூ. 15 லட்சம் வதந்தியால் திணறிய மூணாறு தபால் நிலையம்

இந்த நிலையில் இவரது சேவையைப் பாராட்டி கர்நாடக மாநில ராஜ்யசபா உறுப்பினரான பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் 1 லட்சம் ரூபாய் பணத்தை தபால்காரர் சிவனின், வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

சிவன்
சிவன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவன், "என்னோட சர்வீஸ் இந்த வருஷம் மார்ச் மாசமே முடிஞ்சது. நான் ஓய்வாகி வண்ணாரபேட்டைல மனைவியோட இருக்கேன். நான் எந்தப் பலனையும் எதிர்ப்பார்த்து வேலை செய்யல. ஓய்வாகி 5 மாசம் ஆனாலும் மக்கள் என்ன மறக்காம இருக்காங்க. கர்நாடகா எம்.பி  1 லட்சம் ரூபாயை என்னோட அக்கவுன்டுக்கு அனுப்பிருக்கார். அவருக்கு என்னோட நன்றியை  தெரிவிச்சிக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு