Published:Updated:

நீலகிரி:'அமைச்சர், ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்தியாளர்கள் வர வேண்டாம்’ என வேண்டுகோள்!

ஆட்சியர், வனத்துறை அமைச்சர்
ஆட்சியர், வனத்துறை அமைச்சர்

நீலகிரியில் நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில் செய்தியாளர்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் அனைவரிடமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. மக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இந்த மாவட்டத்திலும் ஒரு நாளைக்கு 400 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். தொற்றுப் பரவலைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள்

இந்தநிலையில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில் செய்தியாளர்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டாம் என நீலகிரி மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில், ``கொரோனா இரண்டாம் அலையில் முதியவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் ஒரு சில நண்பர்களும் மரணமடைந்துள்ளார்கள். குறிப்பாக, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய செய்தியாளர்களும், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார்கள் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

எனவே, வரும் நாள்களில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் செய்திகளைச் சேகரிக்க நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உங்களுக்குத் தேவையான செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் உட்பட அனைத்தும் தங்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என வெளியிட்டுள்ளனர்.

நீலகிரி ஆட்சியர், வனத்துறை அமைச்சர்
நீலகிரி ஆட்சியர், வனத்துறை அமைச்சர்

ஆட்சியர் அலுவலக அலுவலர் ஒருவர் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசுகையில், ``வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டம் நேற்று ஊட்டியில் தொடங்கப்பட்டது. இதை வனத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்றனர். முறையாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை. இதில் அதிருப்தியடைந்த ஆட்சியர் இப்படியோர் உத்தரவை வெளியிடச் செய்திருக்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு