Published:Updated:

நீலகிரி: அதி கனமழை எச்சரிக்கை; 253 இடங்களில் பேரிடர் அபாயம்! - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்புச் சுவர்களின் அருகிலோ நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை, இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி வரை இடி, மின்னலுடன் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மழை வெள்ள பாதிப்புகளைவிட நிலச்சரிவாலும், முறிந்து விழும் மரங்களாலும் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்படும் அபாயம் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் உள்ளூர் மக்களை உஷார்படுத்திவருகிறது. வெளியூர்களிலிருந்து நீலகிரிக்கு வருவதை 16-ம் தேதி வரை மக்கள் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்கிடையே இரண்டாவது நாளாக இன்றும் (13 -11-2021) நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி
நீலகிரி

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளாக 253 இடங்கள் கண்டறியப்பட்டு, 3,000-க்கும் அதிகமான அரசுப் பணியாளர்கள் களத்தில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மழை பாதிப்பில் தவிக்கும் மக்களை தங்கவைத்து உணவளிக்க 450 மீட்பு முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி, ``இன்றிலிருந்து 16-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக நமக்கு எச்சரிக்கை வந்துள்ளது. தமிழ்நாடு மாநிலப் பேரிடர் ஆணையம், நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செல்ல வேண்டாம் என அறிவித்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள் அவசியப் பணிகளை தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்புசுவர்களின் அருகிலோ நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி... விடாமல் பெய்யும் கனமழையால் மக்கள் கடும் அவதி!

மழை, இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுபாட்டு அறைக்கு, 1077 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். வட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள கட்டுபாட்டு மையத்துக்கும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மின்சாரம் சார்ந்த புகார்கள் இருந்தால் 1912-க்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இயற்கைச் சீற்றத்தை எதி்ர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்" என்றார்.

நீலகிரி
நீலகிரி

மற்றொரு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``வழக்கமான அளவைவிட 95 முதல் 100 சதவிகிதம் கூடுதல் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பிருக்கிறது. நிலச்சரிவு, குடியிருப்புகள் சேதம், மரங்கள் விழுதல், வெள்ள பாதிப்பு, பயிர் மற்றும் கால்நடைகளுக்குச் சேதம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மண்சரிவுகளை உடனடியாக அகற்ற, 60 ஜே.சி.பி இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு