Published:Updated:

`இடைவிடாத சாரல் மழை; கடும் பனிமூட்டம்!’- மாறுபட்ட காலநிலையால் கலங்கும் நீலகிரி

பத்து நாள் இடைவெளிக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குக் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.

Nilgiri rain and mist
Nilgiri rain and mist

நீலகிரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித்தீர்த்த பெருமழையிலிருந்து தற்போது வரை மழை தீர்ந்தபாடில்லை. கடந்த வாரம் ஒரே இரவில் குன்னூரில் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஒட்டு மொத்த நகரமும் உருக்குலைந்து போனது. கார், பைக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

Nilgiri rain and mist
Nilgiri rain and mist

50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது வரை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை குறைந்து காணப்பட்டது.

தற்போது நீலகிரியில் ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பனிமூட்டம் கடுமையாகக் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Nilgiri mist
Nilgiri mist

இடைவிடாது சாரல் மழை பெய்து வருவதால், ஏற்கெனவே மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வடைந்து உள்ளன. மாறுபட்ட இந்தக் காலநிலையின் காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையால் மலை ரயில் பாதையில் கற்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதால் வரும் 29-ம் தேதி வரையில் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.