Published:Updated:

`மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் தவிக்கக் கூடாது!' -ஊரடங்கில் உதவிக்கரம் நீட்டிய நீலகிரி ஆசிரியர்கள்

உதவி செய்யக் களமிறங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
உதவி செய்யக் களமிறங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

பெயர் வெளியில் சொல்ல விரும்பாத கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மொத்த உலகமும் போராடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு மட்டுமே இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ளது.

Corona Virus
Corona Virus

இந்தியாவிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலை, சுற்றுலா என இந்த இரண்டையும் முக்கியத் தொழிலாகக்கொண்டுள்ள நீலகிரியில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து அன்றாட உணவுக்குச் சிரமப்பட்டு வருகின்றனர்.

உதவி செய்யக் களமிறங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
உதவி செய்யக் களமிறங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகில் உள்ள அவ்வூர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பசியைப் போக்கக் களமிறங்கியுள்ளனர்.

கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம்.. மீண்ட நீலகிரி- மகிழ்ச்சியில் மக்கள்

கோவையைச் சேர்ந்த மனிதநேயம் கொண்ட சில தன்னார்வலர்களின் உதவியுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.

உதவும் ஆசிரியர்கள்
உதவும் ஆசிரியர்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவ்வூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ரவி, " எங்கள் பள்ளியில் ஐம்பதுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர்.

இவர்கள் அன்றைய நாளின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இதனால் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் தவித்தனர். இதன் காரணமாக, மாணவ மாணவிகளும் பட்டினியாக இருப்பார்களோ என்ற எண்ணம் எங்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. பெயர் வெளியில் சொல்ல விரும்பாத கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மேலும்‌ இந்தப் பகுதியில் ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறோம். பள்ளியில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களின் பட்டியலையும் தயார் செய்துவருகிறோம். தேவைப்பட்டால் அவர்களுக்கும் உதவ தயாராகிவருகிறோம். இதற்கு சக ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் சிறப்பான‌ ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு