Published:Updated:

`கைகோத்து பாரம்பர்ய நடனம்; இளவட்டக்கல்!' - தோடர் பழங்குடிகளின் `மொத்வர்த்' புத்தாண்டுக் கொண்டாட்டம்

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

`ஆண்டு முழுவதும் நல்ல மழை செழிக்கவும், எருமைகள் நலமுடன் இருக்கவும் இயற்கையை வணங்கி வழிபடுவோம்'.

நீலகிரியில் வாழ்ந்துவரும் பழங்குடிகளில் தோடர், கோத்தர் ஆகிய பழங்குடிகள் மலை மேலிடப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரமுள்ள மலைத்தொடர்களில் வாழும் இந்தத் தோடர் பழங்குடிகளின் வாழ்வியல் முறைகள் முற்றிலும் வேறானவை. பண்டைய பழங்குடிகளில் ஒன்றான தோடர்கள், எருமை வளர்ப்பைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

உலகில் வேறெங்கும் காணப்படாத தோடர்களின் எருமைகளும் மிகவும் தனித்துவமானவை. மலையையும் மரங்களையும் புல்வெளிகளையும் கடவுளாக வணங்கும் இவர்கள், இதற்கு நிகராக எருமைகளையும் வணங்குகின்றனர். சுமார் 2,000 பேரைக் கொண்டிருந்தாலும் பல மந்துகளில் [ஊர்] வாழ்ந்து வருகின்றனர். நாகரிக வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவரும் இந்தச் சூழலிலும் தோடர்கள் தங்களின் பாரம்பர்யத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இவர்களுக்குப் பல்வேறு விழாக்கள் இருந்தாலும் தோடர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டமான `மொத்வர்த்' மிக முக்கியமான விழாவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தோடர்களின் தாய் மந்தாகக் கருதப்படும் ஊட்டி முத்தநாடு மந்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு மந்துகளிலிருந்து தோடர்கள் தங்களின் பாரம்பர்ய உடை அணிந்து கலந்துகொண்டு வழிபட்டனர்.

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

இந்தப் பாரம்பர்ய விழா குறித்து தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நார்த்தே குட்டன் நம்மிடம் பேசுகையில், ``மொத்வர்த் (MODHVARTH) ஆண்டின் தொடக்க விழாவாக உள்ளது. ஆண்டு முழுக்க நல்ல மழை செழிக்கவும் எருமைகள் நலமுடன் இருக்கவும் இயற்கையை வணங்கி வழிபடுவோம். முத்தநாடு மந்தில் இந்த விழா முடிந்த பிறகே மற்ற மந்துகளில் விழாக்கள் நடைபெறும்.

இந்தவிழாவில் 68 மந்துகளிலிருந்து மக்கள் பங்கேற்றனர். நீலகிரியில் உள்ள மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்களை வழிபட்டுப் பாடல்களாகப் பாடி நடனமாடுவோம். பாரம்பர்ய நடனத்திற்குப் பிறகு இளைஞர்கள் இளவட்டக்கல்லைத் தூக்கி திறமைகளை வெளிப்படுத்துவார்கள்'' என்றார்.

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

முத்தநாடு மந்தைச் சேர்ந்த மற்றொரு பழங்குடி, ``இந்த வழிபாட்டை நாங்கள் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவருகிறோம். இந்த விழாவிற்குப் பிறகு ஆண்டு முழுவதும் நல்ல வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை" என்றார்.

பின் செல்ல