Published:Updated:

வெள்ளத்தில் மூழ்கிய அரிய புத்தகங்கள்! - நீலகிரியில் நூலகங்களைக் கண்டுகொள்ளாத அரசு

கடந்த வாரம் நீலகிரியில் பெய்த பெருமழையின் பாதிப்பிலிருந்து நூலகங்களும் தப்பவில்லை. பராமரிப்பில்லாத நூலகத்தில் பல அரிய நூல்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு பகுதிநேர நூலகமாகத் தொடங்கப்பட்டு, தற்போது ஊர்ப்புற நூலகமாகி, கிளை நூலகமாக மாற நிலம் இல்லாத நிலையில் பல புத்தகங்கள் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் உள்ளன.

நூலகம்
நூலகம்

1,200க்கும் அதிகமான வாசக உறுப்பினர்களைக் கொண்ட இந்த நூலகத்தில் சுமார் 15,000 நூல்கள் உள்ளன. 90 மாத இதழ்கள், 15 வார இதழ்கள், 3 நாளிதழ்கள் போன்றவை வாசகர்களுக்காக வரவழைக்கப்படுகின்றன.

இந்த நூலகம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் வாடகை ஏதும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.

போதிய இட வசதிகள் இல்லாததால் நூல்களை அடுக்கி வைக்க முடியாமல் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு வீணாகி வாசகர்களுக்குப் பயனற்ற நிலையில் உள்ளது. இதேபோல் மழை சமயங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும் என்பதால் மாற்றுக் கட்டடம் குறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்தப் பயனுமில்லை.

ஊரு கொச்சி, 3500 புத்தகம், 600 சதுரடி வீடு - இலவச நூலகம் நடத்தும் 12 வயதான யசோதா!

இந்த நிலையில் கடந்த வாரம் நீலகிரியில் பெய்த பெருமழையில் கேத்தி சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. நூலகத்துக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான அரிய புத்தகங்கள் நீரில் நனைந்து நாசமாயின. அவற்றை உலரவைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அந்த நூல்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகம்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகம்

இதுகுறித்து நூலக வாசகர் ஹரிஹரன் கூறுகையில், ``நீலகிரி போன்ற ஒரு மலை மாவட்டத்தில் இயன்ற அளவு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராமப்புற நூலகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நூலகப் பராமரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேத்தி பாலாடா, கொலக்கம்பை, காட்டேரி வில்லேஜ் உள்ளிட்ட பகுதிகளில் நூலகங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்து நூல்களை நல்ல முறையில் பாதுகாத்து அனைவரும் பயன்டுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து நூலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``புதிய நூலகங்கள் கட்டுவதற்கு நிதி அதிக அளவு உள்ளது. ஆனால், நிலங்கள் போதுமானவையாக இல்லை. கிளை நூலகம் கட்ட 1.50 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. கேத்தி பாலாடாப்பகுதியில் வருவாய் நிலமும் இல்லை. அதேசமயம் நூலகம் கட்ட யாரும் நிலம் தரவும் முன்வருவதில்லை. இதனால் புதிய நூலகம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது" என்றார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தகங்கள்.

நூலகத்திற்குச் சொந்தக் கட்டடம் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்தால் ஊர்ப்புற நூலகங்கள் மூடப்பட்டு மாவட்ட நூலகத்தில் புத்தகங்கள் ஒப்படைக்கப்படும் நிலை ஏற்படும் என்கிறார்கள். இதனால், ஊர்ப்புறங்களில் மீண்டும் நூலகம் தொடங்க சாத்தியமில்லாத நிலை ஏற்படும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.