Published:Updated:

கட்டுக்கடங்காத தொற்றுப்பரவல்; கூடலூர், பந்தலூரில் மீண்டும் முழு ஊரடங்கு!

கூடலூர்
கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுக்குள் வராத நிலையில், இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மிகக் குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ள நீலகிரியின் மலைக்கிராமங்களிலும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப்பரவல் வேகமெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 500 நபர்கள் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகின்றனர். உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

கூடலூர், பந்தலூர், மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. இதனால் மருத்துவமனைகளும், கோவிட்‌ கேர் சென்டர்களும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.

முழு ஊரடங்கில் சில தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இது தொற்றுப் பரவலுக்கு மேலும் வழிவகை செய்யும் என்பதால் மீண்டும் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

கூடலூர்
கூடலூர்

கூடலூர், பந்தலூர், மசினகுடி பகுதிகளில் உள்ள வணிகர்களுடன் அரசுத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து இன்று முதல் வருகின்ற 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து தெரிவித்த கூடலூர் வணிகர்கள், ``இந்தப் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள காரணத்தால், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (9.06.2021) காலை முதல் 14.06.2021 காலை 6 மணி வரை அனைத்துக் கடைகளையும் அடைத்து, தளர்வுகளற்ற முழு ஊரடங்கைக் கடைப்பிடிப்பது என முடிவு செய்துள்ளோம்.

கூடலூர்
கூடலூர்

மக்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கூடலூர் பந்தலூர் தாலுகா மற்றும் மசனகுடி ஒருங்கிணைந்த வணிகர் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மக்களுக்கு மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் போன்றவை நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு