Published:Updated:

தொடரும் மழை, சாலையில் விழும் மரங்கள், தயார் நிலையில் 456 முகாம்கள்; நீலகிரி நிலவரம்!

சாலையில் விழும் மரங்கள்
சாலையில் விழும் மரங்கள்

நீலகிரி மாவட்டத்திற்கு மழை பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.24 மணி நேரமும் செயல்படும் 42 சிறப்பு குழு மற்றும் 456 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

தென்மேற்கு பருவ மழையைப் பொருத்தவரை நீலகிரியில் சரியாக ஜூன் முதல் தேதியில் துவங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக துவங்கியது. தற்போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடைவிடாத காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. காற்று மழை காரணமாக ஒரு சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை அகற்றி சீரமைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையில் விழும் மரங்கள்
சாலையில் விழும் மரங்கள்

சில பகுதிகளில் மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மழை தொடர்ந்தால் அனைத்து அணைகளும் விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளது.

பருவமழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இதனை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த 42 மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழு தயார் நிலையில் உள்ளது. மேலும், இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலையில் விழும் மரங்கள்
சாலையில் விழும் மரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் 456 நிவாரண மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், முதன்மை தொடர்பாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு