Published:Updated:

`பள்ளிகள் 100% கட்டணம் வசூலிக்கின்றனவா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!' - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

School Students
School Students ( Photo: Vikatan / Balasubramanian.C )

100 சதவிகித கல்விக் கட்டணத்தை செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது உடனடியாகப் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளின் காரணத்தால், இரண்டாவது ஆண்டாகக் கல்வி நிறுவனங்கள் முறையாகச் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய வழி மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறப்பு குறித்து தற்போதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

School Students (Representational Image)
School Students (Representational Image)
அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை! தயார் நிலையில் இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

ஆனால், பெரும்பாலான பள்ளிகள் 100 சதவிகித கட்டணத்தைச் செலுத்தக் கோரி பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதி சில பெற்றோர் முழுக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.கொரோனா காரணமாக உரிய வருவாய் இன்றி தவித்து வரும் மக்கள் முழு கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்,100 சதவிகித கட்டணத்தை செலுத்தக் கோரி வற்புறுத்தும் பள்ளிகள் மீது புகார்கள் தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் நீதிமன்ற உத்தரவினை மீறி 100 சதவிகிதம் கல்விக் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தினால், குறிப்பிட்ட அந்தப் பள்ளிகள் மீது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் புகார் தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ceonilgirisfeescomplain@gmail.com என்ற தனி மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு