Published:Updated:

நீலகிரி: கொரோனா விதிமீறல்; மின் வாரியத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்! - அதிரடி காட்டிய கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத காட்டுக்குப்பை மின்வாரிய அதிகாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நீலகிரி மாவட்டத்திலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியள்ளது .புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

ooty
ooty

தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் கிரிமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், காட்டுக்குப்பை மின் வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதில்,காட்டுக்குப்பை மின் வாரியம் மற்றும் புதிய மின் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளபடவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனால்,அங்கு பணியாற்றி வரும் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை நோய் பரப்பும் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அலட்சியமாக செயல்பட்ட குந்தா நீர்மின் வாரியத்திற்குட்பட்ட காட்டுக்குப்பை நீர் மின் திட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மின் வாரியம்
தமிழ்நாடு மின் வாரியம்

இந்த அதிரடி குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,"கட்டுப்பாடுகளுடன் இருத்தல் அவசியம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.எனினும், காட்டுக்குப்பை நீர் மின் திட்டம் பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. போதிய தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இருந்துள்ளனர். இதனாலேயே இந்தப் பகுதி கிளஸ்டராக அறிவிக்கப்பட்டது. மேலும், விழிப்புணர்வு நடவடிக்கையாகவே காட்டுக்குப்பை மின் திட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தோம்"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு