Published:Updated:

ஊட்டிக்கு வராதீங்க மக்களே... நீலகிரி கலெக்டரின் `கொரோனா' ரெக்வெஸ்ட்

ooty garden
ooty garden

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கொரோனா பரவலைத் தடுக்க சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ``கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. இதனால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 31-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். அண்டை மாநிலமான கேரளாவில் மேலும் 2 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு வராதீங்க மக்களே... நீலகிரி கலெக்டரின் `கொரோனா' ரெக்வெஸ்ட்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், யாரும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம். மாநில எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் வருபவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை சோதனைக்குட்படுத்திய பின் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் யாரும் வரும் 31-ம் தேதி வரை ஊட்டிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். திருமணம் மற்றும் பொது விழாக்களில் பொதுமக்கள் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ooty garden
ooty garden

வரும் 31-ம் தேதி வரை எந்த ஹோட்டலிலும் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கக் கூடாது. 40 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், யாருக்கேனும் தொற்று ஏற்படுவதாகக் கருதினால், அவர்கள் 1077 என்ற இலவச தொலைபேசி எண்களுக்குத் தகவல் அளிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் உள்ளதற்கான அறிகுறிகள் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

muntain train
muntain train

நீலகிரியில் தோட்டக்கலை, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு