Published:Updated:

`தமிழகத்திலேயே நீலகிரியில்தான் அதிக சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!' - மாவட்ட ஆட்சியர்

Nilgiris District Collector Innocent Divya
Nilgiris District Collector Innocent Divya

``மாநில அளவில் நீலகிரி மாவட்டத்தில்தான் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான எண்ணிக்கையில் 47% அளவுக்கு நாம் தடுப்பூசி போட்டுள்ளோம்."

கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப் படும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ஆட்சியர், ``நீலகிரியில் தற்போதுவரை 430 பேர் தொற்று பாதிப்பில் உள்ளனர். இதில் காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்புடன் கொரோனா தொற்று ஏற்பட்டு 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 376 பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர வீட்டுத் தனிமையில் உள்ளவர் களிடம் மாவட்ட கோவிட் கட்டுபாட்டு மையத்தின் மூலம் நாள்தோறும் தொடர்புகொண்டு அவர்களின் உடல் நிலை குறித்து கேட்கப்பட்டு வருகிறது.

ooty
ooty

மாநில அளவில் நீலகிரி மாவட்டத்தில்தான் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான எண்ணிக்கையில் 47% அளவுக்கு நாம் தடுப்பூசி போட்டுள்ளோம். தற்போது தொற்று ஏற்பட்டு வந்துள்ளவர்களிடம் ஆய்வு செய்ததில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் குறைந்த அளவிலானோரே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் டோஸ் எடுத்தவர்களில் 10 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நாளுக்குள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது.

ஊட்டி அரசு மருத்துவமனையில் 110 படுக்கைகளும், குன்னூர் மருத்துவனையில் 24 படுக்கைகளும் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. இதுவரை 25 பேர் ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில், அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் கடைகள் மூடப்படும்.

nilgiris collector innocent divya
nilgiris collector innocent divya

ஊட்டி அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 1,300 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்ஸிஜன் வசதி போதுமான அளவு உள்ளது. அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 1,100 படுக்கைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி போதுமானதாக உள்ளது. அதிகரிக்கும் பட்சத்தில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு