Published:Updated:

நீலகிரி: கட்டுக்கடங்காத மக்கள்; படையெடுக்கும் வாகனங்கள்... எச்சரித்து அனுப்பிய கலெக்டர்!

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரியில் ஊரடங்கை மீறி சாலையில் படையெடுக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியரே நேரடியாக அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 400 பேர் வரை புதிதாகத் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் போராடி வரும் நிலையில், உரிய மருத்துவக் காரணங்கள், மற்றும் துக்க நிகழ்வில் பங்கேற்க மட்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் நீலகிரியில் ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களை சமாளிப்பதே பெரும் சவாலாக இருப்பதாக காவல்துறையினர் புலம்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி பகுதியில் நேரடியாக அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.சேரிங்கிராஸ் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், பெரும்பாலோனார் கோவிட்-19 பணி, விவசாயப் பணிக்காக என்பது போன்ற தகவல்களை வாகனங்களில் ஒட்டிக் கொண்டு தேவையற்று சுற்றித் திரிவது தெரியவந்தது. அதுபோன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவக் காரணங்கள் எனக் கூறிவிட்டு தேவையின்றி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

ஊரடங்கு மீறல் குறித்து பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ''தேவையில்லாமல் வரக்கூடிய வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். மக்களுக்கு இன்னும் கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி வெளியில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களைத் தவிர்த்து பிற வாகனங்கள் வந்தால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு