Published:Updated:

`105 பேருக்கும் கொரோனா நெகட்டிவ்; நிம்மதியில் மக்கள்!' நம்பிக்கையளிக்கும் நீலகிரி நிலவரம்

 கோத்தகிரி, சோலூர் மட்டம்
கோத்தகிரி, சோலூர் மட்டம்

சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் வந்து, இங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நபர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அனைவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் சென்னை கோயம்பேடு சென்று திரும்பியவர்கள், அவர்களின் உறவினர்கள் என இரண்டு கட்டமாக நீலகிரியைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் சிகிச்சைபெற்று தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

அதன்பின்னர் சென்னையிலிருந்து நீலகிரிக்கு வந்த கர்ப்பிணி உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களும் குணமடைந்தனர்.

ஊட்டி
ஊட்டி

இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் இருந்து கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதிக்கு வந்த கர்ப்பிணி மற்றும் மஞ்சூர் பிக்கட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 105 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் 105 பேருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

 கோத்தகிரி,  சோலூர் மட்டம்
கோத்தகிரி, சோலூர் மட்டம்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``சென்னையிலிருந்து திரும்பிய கர்ப்பிணி உள்ளிட்ட இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 105 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அச்சமும் கொள்ள வேண்டாம். அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு