Published:Updated:

வீட்டிலேயே பிரசவம், அதிக ரத்தப்போக்கு; 6 கி.மீ நடந்து சென்று காப்பாற்றிய மருத்துவக் குழுவினர்!

தொட்டில் கட்டி சுமந்து செல்லும் மக்கள்
தொட்டில் கட்டி சுமந்து செல்லும் மக்கள்

மாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு குறைப்பிரசவமாக வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள் கொடி முழுமையாக வெளியே வராமல், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்வனத்தில்அமைந்துள்ளது தாளமொக்ககை பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணான 7 மாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு குறைப்பிரசவமாக வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள் கொடி முழுமையாக வெளியே வராமல், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முறையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற அந்த கிராமத்திற்கு சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், கிராம சுகாதார செவிலியர், ஆஷா பணியாளர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி வழியாக சுமார் 6 கி.மீ தூரம் நடந்தே சென்று பழங்குடி பெண்ணின் வீட்டை அடைந்து அந்தப் பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

தொட்டில் கட்டி சுமந்து செல்லும் மக்கள்
தொட்டில் கட்டி சுமந்து செல்லும் மக்கள்
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!

உயர் சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை ஊட்டியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் மூங்கிலில் போர்வையைக் கொண்டு தொட்டில் கட்டி, ஊர் மக்களின் உதவியுடன் 6 கிலோமீட்டர் வரை சுமந்து வந்து 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரியான தருணத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதாரத்துறையினரால் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

குறைமாத பிரசவத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த பழங்குடியினப் பெண்ணிற்கு சிகிச்சையளிக்க 6 கி.மீ தூரம் நடந்து சென்ற இந்த சுகாதாரத்துறையினரை பலரும் பாராட்டி வரும் நிலையில், பிரசவத்தின் போது குழந்தை இறப்பை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் `பிரெட்டிலில் ஆர்ட்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பினர் ஊட்டிக்கு வந்து, நீலகிரியில் வாழ்ந்துவரும் பழங்குடியினப் பெண்களின் பிரவசம் மற்றும் குழந்தைகளின் மருத்துவத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை கொடையாக அளித்தனர்.

ஆம்புலன்ஸ் வழங்கிய தன்னார்வலர்கள்
ஆம்புலன்ஸ் வழங்கிய தன்னார்வலர்கள்
வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லை; ஊர் மக்களால் 10 கி.மீ டோலி கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!

இது குறித்துப் பேசிய நீலகிரி சுகாதாரத்துறையினர், ``பழங்குடியினர் மத்தியில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் பழக்கம் இருந்தது. தொடர் களப்பணி மூலம் இதை தடுத்துள்ளோம். குறை மாதத்தில் ஏற்பட்ட பிரசவம் காரணமாகவே இந்தப் பழங்குடிப் பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். சமயோசிதமாகச் செயல்பட்டு தாயையும் சேயையும் நமது சுகாதாரத்துறையினர் காப்பாற்றினர். தற்போது புதிதாக ஒரு ஆம்புலன்ஸை நமக்கு வழங்கியுள்ளனர் ஒரு தன்னார்வ அமைப்பினர். பழங்குடி கர்ப்பிணிகளின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு