Published:Updated:

11 பழங்குடி குடும்பங்களுக்குத் தடுப்பூசி; 10 கி.மீ காட்டில் நடந்த சுகாதாரத்துறையினர்!

நடந்து சென்ற ஊழியர்கள்
நடந்து சென்ற ஊழியர்கள்

``இருட்டுறதுக்குள்ள டவுனுக்குப் போயாகணும் என்ற நிலை. எல்லாருமா சேர்ந்து 10 கி.மீ நடந்தே வந்தோம். இவ்வளவு கஷ்டத்துலயும் அந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது மனசுக்கு திருப்தியா இருந்தது."

நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களிடமும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான பழங்குடிகள் தயக்கம் காட்டுவதால், வனத்திலும், வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சேற்றில் சிக்கிய வாகனம்
சேற்றில் சிக்கிய வாகனம்
"ஏதோ எங்களால் முடிந்தது!" - பழங்குடி மற்றும் நாடோடி மக்களுக்கு உதவும் கல்லூரி மாணவர்கள்!

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில் வாழ்ந்து வரும் 11 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக செவிலியர், பழங்குடியினர் நல வருவாய் ஆய்வாளர், நக்சல் சிறப்பு காவலர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் குழுவாக இரண்டு வாகனங்களில் சென்றனர்.

மழையையும் பொருட்படுத்தாது மோசமான சாலையில் பயணித்து அந்தப் பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்திவிட்டு திரும்புகையில் மழை மேலும் தீவிரமடைந்ததால், இவர்கள் சென்ற வாகனம் சேற்றில் சிக்கியது. மற்றொரு வாகனமும் நிலைதடுமாறியது. வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. வாகனத்தை மீட்க சுமார் 4 மணி நேரம் போராடியும் எந்தப் பலனும் இல்லை. யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனப்பகுதி என்பதால் இரவுக்குள் திரும்பியாக வேண்டும் என்று 10 கி.மீ தொலைவை வனத்தில் நடந்தே கடந்துள்ளனர்.

வாகனத்தை மீட்கும் பழங்குடிகள்
வாகனத்தை மீட்கும் பழங்குடிகள்
நீலகிரி: கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளியும் மக்கள்; விழிப்புணர்வு ஏற்படுத்திய  சுகாதாரத்துறை!

இந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்த சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர், ``நாங்க அந்த ஊருக்குக் கெளம்பும்போது மழை அதிகமா இருந்தது. மண் ரோடு என்பதால வண்டி ஓட்ட ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒருவழியா அந்த ஊருக்குப் போய் தடுப்பூசி போட்டோம். திரும்பும்போது மழை இன்னும் அதிகமாச்சு. ரெண்டு வண்டியுமே மாட்டிக்கிச்சு. ஜீப்பை வெளிய எடுக்க ஊர் இளைஞர்கள் பல மணி நேரமா கஷ்டப்பட்டாங்க. யானை, சிறுத்தை, புலினு எல்லா விலங்குகளும் வரக்கூடிய ஏரியா அது. இருட்டுறதுக்குள்ள டவுனுக்குப் போயாகணும் என்ற நிலை. எல்லாருமா சேர்ந்து 10 கி.மீ நடந்தே வந்தோம். இவ்வளவு கஷ்டத்துலயும் அந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது மனசுக்கு திருப்தியா இருந்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு