Published:Updated:

நீலகிரி மலை ரயில்: கழன்று விழுந்த சக்கரத்தின் பாகம்; நடுக்காட்டில் 4 மணி நேரம் தவித்த பயணிகள்!

நீராவி இன்ஜின்

பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜின் செயல்பாட்டில் லேசான மாற்றம் இருப்பதை ஓட்டுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீலகிரி மலை ரயில்: கழன்று விழுந்த சக்கரத்தின் பாகம்; நடுக்காட்டில் 4 மணி நேரம் தவித்த பயணிகள்!

பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜின் செயல்பாட்டில் லேசான மாற்றம் இருப்பதை ஓட்டுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

Published:Updated:
நீராவி இன்ஜின்

யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்துடனும் ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில். டீசல் மற்றும் பர்னஸ் ஆயிலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே இயக்கப்படுகிறது. நீராவி இன்ஜின்களை கூடுதல் கவனத்துடன் பராமரித்து இயக்கி வருகின்றனர். இந்த நீராவி மலை ரயிலில் பயணிக்க உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யப்படுகிறது. தற்போது தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

மலை ரயில்
மலை ரயில்

இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்னூர் நோக்கி கிளம்பியது. பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜின் செயல்பாட்டில் லேசான மாற்றம் இருப்பதை ஓட்டுநர்கள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து, ஆடர்லி ரயில் நிலையத்தில் உடனடியாக ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். ரயில் சக்கரத்தின் ராடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த நிக்கல் பின் ஒன்று கழன்று விழுந்திருப்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக குன்னூர் ரயில் நிலைய பணிமனையிலிருந்து ஊழியர்கள் சென்று பழுதை சரி செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மலை ரயில் 4 மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.‌ உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுமார்‌ 3 மணி நேரமாக சுற்றுலாப் பயணிகள் தவித்தனர்.

மலை ரயில்
மலை ரயில்

இது குறித்து தெரிவித்த ரயில்வே பணியாளர்கள், "மேட்டுப்பாளையத்திலிருந்து ஆடர்லி அருகில் வரும்போது சக்கரத்தில் இருந்த நிக்கல் பின் ஒன்று கழன்று கீழே விழுந்துள்ளது. ரயிலை மெதுவாக இயக்கி ரன்னிமேடு வரை இயக்கியுள்ளார்கள். பின் விழுந்த இடத்தை கண்டறிந்து அங்கிருந்து எடுத்து வந்து மீண்டும் பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டது" என்றனர்.