Published:Updated:

நீலகிரி: பக்கவாதத்தால் பாதிப்பு! - 8 ஆண்டுகளாகக் கழிப்பறை கட்டப் போராடும் முதியவர்

முதியவர் காளிமுத்து
முதியவர் காளிமுத்து

`மழை, பனி, குளிர்னு சிரமப்பட்டு ரொம்ப தூரம் நடக்கணும். காட்டுமாடு, கரடி தொந்தரவும் இருக்கு. இதனால பல நேரத்துல சாப்பிடாமலே இருந்துக்குவேன்.’

நீலகிரி மாவட்டம் குன்னூர் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது செலவிப் நகர். சுமார் 60 வீடுகளைக் கொண்ட இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் மலைக்காய்கறி விவசாய கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். நடை பாதை, குடிநீர் போன்ற‌ அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

முதியவர் காளிமுத்து
முதியவர் காளிமுத்து

இந்த கிராமத்தில் உள்ள சிலரது வீடுகளில் கழிப்பறை இல்லாத அவல நிலை தொடர்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஒரு பக்க கை கால்கள் செயலிழந்த நிலையில் திறந்த வெளி கழிப்பிடத்திற்காக நாள்தோறும் ஒரு கி‌.மீ நடக்கும் அவலம் தொடர்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த முதியவர், ``என்னோட பெயர்‌ காளிமுத்து. கூலி வேலை செஞ்சி வாழ்க்கையை நடத்திவந்தேன். எட்டு வருசத்துக்கு முன்னாடி திடீர்னு ஒரு நாள் பக்கவாதம் வந்து ஒரு பக்கம் கை, கால் செயலிழந்து போச்சு. வேலைக்கும் போக முடியல. சம்சாரம்தான் கூலி வேலைக்கு போயி என்ன கவனிச்சிக்கிறாங்க.

வீட்ல டாய்லெட் இல்லாததால் திறந்தவெளிக்குத்தான் போகனும். இப்போ கால் முடியாதாதால நடக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறேன். மழை, பனி குளிர்னு சிரமப்பட்டு ரொம்ப தூரம் நடக்கணும். காட்டுமாடு, கரடி தொந்தரவும் இருக்கு. இதனால பல நேரத்துல சாப்பிடாமலே இருந்துக்குவேன். எங்க வருமானத்த வச்சி, பல வருசமா போராடியும் ஒரு டாய்லெட் கட்ட முடியல’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

முதியவர் காளிமுத்து
முதியவர் காளிமுத்து

இவர் மனைவி அமராவதி நம்மிடம் பேசுகையில் ``அரசாங்கத்தின் மூலம் ஒரு கழிவறை கிடைத்தால் போதும். எங்களுக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம். கழிவறை இல்லாமல் நாள்தோறும் இவர் படும் வேதனைகளை நினைக்கவே கஷ்டமாக உள்ளது" என்றார்.

Vikatan

இதே பகுதியைச் சேர்ந்த ரஜினி நம்மிடம் பேசுகையில், ``அனைவருக்கும் கழிவறை, திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமம் எனப் பல விளம்பரங்கள் செய்கிறார்கள். ஆனால், நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் ஒரு நபருக்கு எட்டு ஆண்டுகளாக போராடியும் ஒரு கழிவறையைப் பெற முடியவில்லை" என ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்.

near selvip nagar
near selvip nagar

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது ``விரைவில் கழிவறைகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு