Published:Updated:

நீலகிரி: `எங்க ஊர்ல கொரோனா இல்ல!' - வெளியாட்களைத் தடுக்க மூங்கில் பாதுகாப்பு போடும் பழங்குடிகள்

மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்
மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்

கூடலூரில் பழங்குடி மக்களிடமும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வெளியாட்கள் வருவதைத் தடுக்க பாதைகளில் மூங்கில்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.

கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நீலகிரி மாவட்டத்தில் தற்போது பரவல் வேகம் அதி தீவிரமாக உள்ளது. முதல் அலையைப் போலல்லாமல் கொரோனா இரண்டாம் அலை பழங்குடிகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. குறிப்பாக கூடலூர் பகுதிகளில் தொற்று வேகம் இன்னும் அதிகமாக உள்ளது.

மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்
மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்

மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள இந்த மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 400-க்கும் அதிகமானோர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நோய் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இருப்பினும் கொரோனா குறித்த அச்சத்தில் பழங்குடிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள கோடமூலா பழங்குடியின கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு வெளியாட்கள் யாரும் வராத வகையில், ஊரின் நான்கு பக்க சாலைகளிலும் மூங்கில்களை வெட்டிச் சாய்த்து தடுப்புகளை அமைத்து வருகின்றனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களையும் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்
மூங்கில் தடுப்புகளை அமைத்த பழங்குடிகள்

இது குறித்துப் பேசிய கோடமூலா பழங்குடியின கிராம மக்கள், ``எங்க கிராமத்துல இதுவரை யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படலை. வெளியிலிருந்து வர்றவங்களாலதான் எங்களுக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கு. இதுலயிருந்து எங்களைப் பாதுகாத்துக்கத்தான் நாங்க இப்படி பூத்த மூங்கில் தடுப்புகளை ஏற்படுத்துறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு