Published:Updated:

கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட விபரீதம்; யானை தாக்கி உயிரிழந்த பழங்குடி இளைஞர்!

வனத்துறையினர்
வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள செம்மனாரை பகுதியைச் சேர்ந்த 26 வயதான ராஜ்குமார் என்ற இருளர் பழங்குடியின இளைஞரை காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள செம்மனாரை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர், தாளமுக்கை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று நான்கு பேரையும் திடீரென விரட்டியதுள்ளது.

மீட்கப்பட்ட இளைஞர் உடல்
மீட்கப்பட்ட இளைஞர் உடல்

சற்றும் எதிர்பாராத நால்வரும் யானையிடமிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஒரு இளைஞர் மட்டும் திசை மாறி தனியாக ஓடியுள்ளார். அந்த இளைஞரை விரட்டிப்பிடித்த யானை, சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. தப்பித்துச் சென்ற மூன்று இளைஞர்கள் ஊருக்குள் சென்று மக்களை அழைத்து வந்துள்ளனர்.

வந்து பார்த்தபோது அந்த இளைஞர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழங்குடி இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த ராஜ்குமார்
யானை தாக்கி உயிரிழந்த ராஜ்குமார்

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், ``கோத்தகிரி வனச்சரகம், குஞ்சப்பனை காவல் பகுதிக்குட்பட்ட செம்மனாரையில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 26 வயதான ராஜ்குமார் என்பவரை நேற்று இரவு காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார். விசாரனை மேற்கொண்டதில், கோயிக்குச் சென்று செம்மனாரையில் உள்ள வீட்டுக்குத் திரும்புகையில், புதர் மறைவில் இருந்த யானை தாக்கியதை உறுதி செய்துள்ளோம். இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு