சுற்றுலா சிறப்பு வாய்ந்த கோடை வாசஸ்தலமான நீலகிரியில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீஸன் கடைப்பிடிக்கப்படுகிறது. கொதிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்ப நீலகிரிக்கு படையெடுக்கும் பயணிகளைக் குளிர்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கண்காட்சிகளை நடத்துவது வழக்கம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டுகளைக் கடந்து நடத்தப்பட்டு வரும் மலர் கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடத்தப்படும் பழக் கண்காட்சி போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகப் பெரும்பாலான பயணிகளால் கண்டு ரசிக்கப்படுகின்றன. கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகக் கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் பூங்காக்களில் லட்சக்கணக்கான மலர் நாற்றுகளை நடவு செய்து தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 120 ரகங்களில் 3.63 லட்ச மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து தெரிவித்த சிம்ஸ் பூங்கா அதிகாரிகள், ``இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் பூங்காக்களை புதுப்பொலிவு படுத்தி வருகிறோம். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு வகையான மலர் நாற்றுகளை அறிமுகம் செய்துள்ளோம்.

சால்வியா, டேலியா, பால்சம், மேரிகோல்டு, ஆஸ்டர், செல்லோசியா போன்ற 120 வகையான மலர் நாற்றுகளை நடவு செய்து வருகிறோம். கோடை சீஸனில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்" என்றனர்.