Published:Updated:

நீலகிரி: `ரேஷன் அரிசியும் இல்ல, ₹2,000 காசும் இல்ல!' - பஞ்சத்தில் தவிக்கும் கூடலூர் பழங்குடிகள்

காட்டுநாயக்கர் பழங்குடிகள்
காட்டுநாயக்கர் பழங்குடிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மூலக்காடு பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரிசிகூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 6 வகை பழங்குடிகள் இருந்தாலும் இவர்களின் மொத்த மக்கள் தொகையே 27,032 தான். இந்த மாவட்டத்தில் உள்ள இதர மக்களின் தொகையை ஒப்பிடுகையில் பழங்குடிகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே உள்ளது.

காட்டுநாயக்கர் பழங்குடிகள்
காட்டுநாயக்கர் பழங்குடிகள்

மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், இவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இன்றளவும் முறையாக சென்று சேரவில்லை என்பது வேதனையான உண்மை. அதிலும் குறிப்பாகக் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடிகளின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

இந்நிலையில், கூடலூர் தேவர்சோலை பகுதிக்கு உட்பட்ட மூலக்காடு மற்றும் குழி மூலா பகுதிகளில் உள்ள காட்டுநாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் நியாய விலைக்கடைகளில் ரேஷன் அரிசியைக்கூட பெற முடியாமல் உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களின் பரிதாப நிலை குறித்து நம்மிடம் கண்ணீர் வடித்த பழங்குடியினப் பெண் சுஜாதா, ``ஏற்கெனவே எங்களுக்கு ரொம்ப கஷ்டம். வீடு, தண்ணி, ரோடுனு எந்த வசதியும் கிடைக்காது. இப்போ கொரோனா பொதுமுடக்கத்தால எங்களுக்கு வேலையும் இல்ல. குளி மூலா, மூலக்காடு ஏரியால 11 குடும்பத்துக்கு பல வருஷமா ரேஷன் கார்டு இல்ல. எழுதிக்கொடுத்து பல மாசம் ஆச்சு. இன்னும் கார்டு கிடைக்கல. அரிசிகூட வாங்க முடியல. அரசாங்கம் கொடுத்த ரூ.2,000யும் கிடைக்கல. எல்லார் வீட்லயும் குழந்தைங்க இருக்காங்க. இதுவர கடையில காசு கொடுத்து அரிசி வாங்குனோம். இனி அரிசி வாங்கக் காசும் இல்ல. அரிசி கிடைக்க ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சா போதும்" என்றார் தழுதழுத்த குரலில்.

காட்டுநாயக்கர் பழங்குடிகள்
காட்டுநாயக்கர் பழங்குடிகள்

இந்த விவகாரத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கொண்டுச் சென்றோம். ``இவர்கள் குறித்த தகவல்களை அனுப்புங்கள். அலுவர்களை அனுப்பி உடனடியாக இந்த மக்களுக்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

வழி பிறக்கட்டும் விரைவில்!

அடுத்த கட்டுரைக்கு